உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / காங்கிரஸ் விட்டுக் கொடுத்ததா; தி.மு.க., பறித்து கொண்டதா? * ஈரோடு கிழக்கு கை மாறியதன் பின்னணி

காங்கிரஸ் விட்டுக் கொடுத்ததா; தி.மு.க., பறித்து கொண்டதா? * ஈரோடு கிழக்கு கை மாறியதன் பின்னணி

சென்னை:ஈரோடு கிழக்கு தொகுதியில் தி.மு.க., போட்டியிடுவது, காங்கிரஸ் கட்சிக்குள் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.கடந்த 2021 சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகளை, தி.மு.க., ஒதுக்கியது. அதில் ஈரோடு கிழக்கு தொகுதியும் ஒன்று. அங்கு காங்கிரஸ் சார்பில் வென்ற திருமகன் ஈவெரா காலமானதால், 2023 பிப்ரவரி 27ல் இடைத்தேர்தல் நடந்தது. அதில் வென்ற இளங்கோவன் மறைவால், இரண்டாவது முறையாக இடைத்தேர்தல் நடக்கிறது.இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் பேட்டியளித்த தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, 'ஈரோடு கிழக்கு தொகுதியை, எங்களிடம் இருந்து தி.மு.க., பறிக்காது; இயற்கையாகவே, அது காங்கிரஸ் தொகுதிதான்' என கூறியிருந்தார். கூடவே கட்சி சார்பில் போட்டியிட விரும்புவோர் பட்டியல் தயார் செய்தார். அந்த பட்டியலில் முதல் பெயராக, இளங்கோவன் மகன் சஞ்ச சம்பத் பெயர் இடம் பெற்று இருந்தது. இந்தத் தகவல் வெளியானதும், ஈரோடு பகுதியில் இருக்கும் காங்கிரஸார் கோபமாகினர். ஈவெரா குடும்பத்தைச் சேர்ந்தோர் என்ற ஒரே காரணத்துக்காக, இளங்கோவனுக்கும், அவருடைய மகன் களுக்குமாக ஈரோடு கிழக்குத் தொகுதி தாரை வார்க்கப்படுவது ஏற்கக் கூடியது அல்ல; இம்முறை எக்காரணம் கொண்டும் தொகுதியை இளங்கோவன் குடும்பத்தாருக்கு விட்டுக் கொண்டுக்கக் கூடாது என கொந்தளித்தனர். இந்த தகவலை, கட்சியின் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகைக்கும் தெரியப்படுத்தினர். இந்நிலையில், இம்முறை தொகுதியில் தி.மு.க., தான் போட்டியிட வேண்டும்; காங்.,குக்கு விட்டுக் கொடுத்தால், தொகுதியில் நாங்கள் முழு ஆர்வத்தோடு பணியாற்ற மாட்டோம் என, ஈரோடு மாவட்ட தி.மு.க., நிர்வாகிகள், கட்சியின் இளைஞர் அணி செயலரும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலினிடம் தெரிவித்தனர். இதையடுத்து, கட்சியின் ஈரோடு மாவட்ட முக்கிய நிர்வாகிகளிடம் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார். அப்போது, தங்களுடைய உள்ளக் குமுறலை தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலினிடம் பேசியுள்ளார் உதயநிதி. காங்., தலைமையிடம் பேசி, இம்முறை நாங்களே போட்டியிடுகிறோம் என்று சொல்லுங்கள் என வலியுறுத்தி உள்ளார். கூடவே, மாவட்ட நிர்வாகிகள் சிலர் முதல்வர் ஸ்டாலினை சந்தித்துள்ளனர். அப்போது, ''ஈரோடு இடைத்தேர்தல் நடந்து முடிந்த பின், ஓராண்டுக்கு மட்டுமே தேர்வு செய்யப்படும் எம்.எல்.ஏ., இருப்பார். ஆனால், ஈரோட்டைப் பொறுத்த வரை, காங்., வேட்பாளரை நிறுத்தினால், எதிர்பார்க்கும் வெற்றி பெற முடியாது. அதோடு, தொகுதியை காங்.,குக்கு விட்டுக் கொடுத்தாலும், கூட்டணிக்கு தலைமை தாங்கும் கட்சியாக, இடைத்தேர்தலில் தி.மு.க., தான் அனைத்து தேர்தல் வேலைகளையும் பார்த்து வேட்பாளரை வெற்றி பெற வைக்க வேண்டும். ஏகத்துக்கும் செலவழிக்க வேண்டும். இப்படியெல்லாம் செய்து கூட்டணி கட்சியை வெற்றி பெற வைப்பதற்கு பதிலாக, நம் கட்சி வேட்பாளரை போட்டியிட வைத்து வெற்றி பெற்றால், தி.மு.க., ஆட்சிக்கு வந்த நான் காண்டு காலத்தில், நம் செயல்பாட்டுக்கு மக்கள் அளித்த அங்கீகாரம் என பிரசாரம் செய்ய முடியும். அடுத்து வர இருக்கும் பொதுத் தேர்தலுக்கும் இது கைகொடுக்கும்,'' என யோசனை கூறியுள்ளனர். கட்சி நிர்வாகிகளும், துணை முதல்வரும் சொன்ன விஷயங்கள் அனைத்தும் சரியாக இருக்கவே, தி.மு.க.,வின் விருப்பத்தை செல்வப்பெருந்தகையிடம் சொல்லியுள்ளார் முதல்வர்.இதையடுத்து, கட்சியின் மேலிடப் பொறுப்பாளர்கள் வாயிலாக, தகவலை காங்., தலைவர் கார்கேயிடமும், ராகுல் மற்றும் சோனியாவின் கவனத்துக்கு கொண்டு சென்றார் செல்வப்பெருந்தகை. ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெறுவதால், காங்.,க்கு தற்போதைய நிலையில் எந்த மாற்றமும் வரப் போவதில்லை. அதனால், தி.மு.க.,வின் விருப்பம் எதுவோ, அதுபடியே நடந்து கொள்ளுங்கள் என சோனியாவும், ராகுலும் சொல்லி விட்டனர். இதையடுத்தே, 'ஈரோடு கிழக்கில் தி.மு.க., போட்டியிடும்' என, செல்வப்பெருந்தகையே நேற்று முன்தினம் அறிவித்தார். ஆனால், இந்த அறிவிப்புக்குப் பின், தமிழக காங்.,கில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் மாநில நிர்வாகி ஒருவர் கூறியதாவது:கடந்த 2023ல், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நடந்தபோதே, தி.மு.க., பறிக்க விரும்பியது. ஆனால், அப்போது மாநில தலைவராக இருந்த அழகிரி, காங்கிரஸ் போட்டியிட்ட தொகுதியை விட்டுக் கொடுக்க மறுத்து விட்டார். செல்வப்பெருந்தகையிடம் பேசி, கச்சிதமாக காரியத்தை முடித்து விட்டார் முதல்வர்.வரும் சட்டசபைத் தேதலில் தி.மு.க., அதிக தொகுதிகளை காங்.,குக்கு விட்டுக் கொடுக்கும். வரும் ஜூலையில், ராஜ்யசபா தொகுதி ஒன்றை காங்.,குக்கு விட்டுக் கொடுக்கும் என்று, ஈரோடு தொகுதியை விட்டுக் கொடுத்ததற்கு, செல்வபெருந்தகை சமாதானம் சொல்கிறார். அது ஏற்கக்கூடியதல்ல. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி