உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சொத்து பத்திரத்தில் டிஜிட்டல் கையெழுத்து; பதிவுத்துறை ஆலோசனை

சொத்து பத்திரத்தில் டிஜிட்டல் கையெழுத்து; பதிவுத்துறை ஆலோசனை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சொத்து விற்பனை பத்திரங்களில் விற்பவர், வாங்குபவர், 'டிஜிட்டல்' முறையில் கையெழுத்திடும் வசதியை அறிமுகப்படுத்துவது குறித்து, பதிவுத்துறை அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.வீடு, மனை போன்ற சொத்துகள் பரிவர்த்தனையில் மோசடிகளை தடுக்க, பதிவுத்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அவசியம்

ஆள்மாறாட்டம், போலி ஆவணங்கள் பயன்படுத்தி உரிமையாளருக்கு தெரியாமல் சொத்து அபகரிப்பது நடக்கிறது. சார் - பதிவாளர்கள் எவ்வளவு கவனமாக இருந்தாலும், மோசடி பத்திரங்கள் வந்து விடுகின்றன. இதில், சொத்து விற்பவர், வாங்குபவர் ஆகியோரின் கையெழுத்தை, வெளியாட்கள் போலியாக போடுகின்றனர். இதை தடுக்க வேண்டும் என்றால், 'டிஜிட்டல்' கையெழுத்து முறை அவசியம்.பல்வேறு துறை கோப்புகளிலும், உத்தரவுகளிலும், கடிதங்களிலும், உயரதிகாரிகள், 'டிஜிட்டல்' முறையில் கையெழுத்திடும் வழக்கம் உள்ளது. அதேபோல், சொத்து பத்திரத்திலும், டிஜிட்டல் கையெழுத்து வசதி பயன்பாட்டுக்கு வர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து உள்ளது.இது குறித்து, பதிவுத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: சொத்து பத்திரங்களை பதிவு செய்யும் பணிகளை எளிமைப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம். பொது மக்கள், எங்கிருந்தும் பத்திரப்பதிவு மேற்கொள்ளும் வகையில், 'ஸ்டார் 3.0 சாப்ட்வேர்' தயாரிக்கப்பட்டுள்ளது. தற்போது, சார் - பதிவாளர்கள் உள்ளிட்ட பல்வேறு நிலை அலுவலர்கள், 'டிஜிட்டல்' கையெழுத்து பயன்படுத்துகின்றனர்.பாதுகாப்பு பத்திரப்பதிவில் பொது மக்களும் டிஜிட்டல் கையெழுத்தை பயன்படுத்தும் வசதியை அறிமுகப்படுத்த ஆலோசித்து வருகிறோம். இதற்கான வசதியை அமல்படுத்த வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. 'ஆன்லைன்' முறை பத்திரப்பதிவில், இது கூடுதல் பாதுகாப்பாக அமையும். இவ்வாறு அவர் கூறினார்.

அடையாள சான்று அளித்து கையெழுத்துக்கான குறியீடு பெறலாம்

காகித முறைக்கு பதிலாக, தற்போது ஆவணங்கள், 'டிஜிட்டல்' முறையில் தயாரிக்கப்பட்டு பயன்படுத்தப்படுகின்றன. ஆரம்பத்தில் டிஜிட்டல் முறையில் தயாரிக்கப்பட்ட ஆவணத்திலும், 'மேனுவல்' முறையில் கையெழுத்திடும் பழக்கம் வந்தது. தற்போது, கணினியில் தயாரிக்கப்படும் ஆவணங்களில், டிஜிட்டல் முறையில் கையெழுத்திடலாம். அரசு மற்றும் தனியார் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், இதற்கான சேவையை வழங்குகின்றன. இதன்படி, பொது மக்கள் ஆதார் போன்ற அடையாள சான்று அளித்து, கட்டணம் செலுத்தி, தனிப்பட்ட டிஜிட்டல் கையெழுத்துக்கான ரகசிய குறியீட்டை பெறலாம். கணினியில் இதை பயன்படுத்தி, எந்த ஆவணத்தில் வேண்டுமானாலும், டிஜிட்டல் கையெழுத்து பதிவிடலாம். சம்பந்தப்பட்ட நபரின் பெயர், சில ரகசிய குறியீடுகளுடன் ஆவணத்தில் டிஜிட்டல் கையெழுத்தாக பதிவாகும். தற்போதைய நிலவரப்படி, 1,500 ரூபாய் கட்டணத்தில், இதற்கான வசதிகள் கிடைக்கின்றன. உரிய சான்றுகள் உள்ள யார் வேண்டுமானாலும், இதை பெறலாம். ஆனால், ஒரு நபரின் டிஜிட்டல் கையெழுத்தை, வேறு யாரும் மோசடியாக பதிவிட முடியாத அளவுக்கு, பாதுகாப்பு அம்சங்கள் உள்ளதாக, வல்லுனர்கள் கூறுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி