பொது சுகாதாரத்துறைக்கு இயக்குநர் நியமனம்
சென்னை:தமிழக பொது சுகாதாரத் துறை இயக்குநராக ஏ.சோமசுந்தரம், மருத்துவ ஊரக நல பணிகள் இயக்குநராக டி.கே.சித்ரா நியமிக்கப்பட்டுஉள்ளனர். தமிழக பொது சுகாதாரத் துறை இயக்குநராக இருந்த செல்வவிநாயகம், மருத்துவ ஊரக நல பணிகள் இயக்குநராக இருந்த ராஜமூர்த்தி ஆகியோர், கடந்த மாதம் ஓய்வு பெற்றனர். அப்பணியிடங்களுக்கு பொறுப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருந்த நிலையில், புதிய அதிகாரிகளை நியமித்து, மக்கள் நல்வாழ்வு துறை செயலர் செந்தில்குமார் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, பொது சுகாதாரத் துறை இயக்குநராக ஏ.சோமசுந்தரம், மருத்துவ ஊரக நல பணிகள் இயக்குநராக டி.கே.சித்ரா, குடும்ப நலத் துறை இயக்குநராக சதியா, மாநில மருத்துவ கல்வி மாணவர் சேர்க்கை செயலராக லோகநாயகி ஆகியோர் நியமிக்கப்பட்டுஉள்ளனர். அதேபோல், சென்னை ஓமந்துாரார் மருத்துவ கல்லுாரி முதல்வராக இருந்த அரவிந்த், ஸ்டான்லி அரசு மருத்துவ கல்லுாரி முதல்வராக நியமிக்கப்பட்டுஉள்ளார். திருவண்ணாமலை மருத்துவ கல்லுாரி முதல்வர் ஹரிஹரன், ஓமந்துாரார் மருத்துவ கல்லுாரிக்கு மாற்றப்பட்டு உள்ளார். சென்னை மருத்துவ கல்லுாரி துணை முதல்வராக இருந்த கவிதா, கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்லுாரி முதல்வராகவும், அக்கல்லுாரியில் முதல்வராக இருந்த லியோ டேவிட், கன்னியாகுமரி மருத்துவ கல்லுாரிக்கும் மாற்றப்பட்டுள்ளனர். அதன்படி, 10 அரசு டாக்டர்களுக்கு, மருத்துவ கல்லுாரி முதல்வராக பதவி உயர்வு அளிக்கப்பட்டு உள்ளது. ஏழு கல்லுாரி முதல்வர்களுக்கு பணியிட மாற்றம் வழங்கப்பட்டு உள்ளது.