உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / டிப்ளமா படிப்பு தேர்வில் மாற்றம் செய்ய தொழில்நுட்ப கல்வி இயக்ககம் முடிவு

டிப்ளமா படிப்பு தேர்வில் மாற்றம் செய்ய தொழில்நுட்ப கல்வி இயக்ககம் முடிவு

தமிழகத்தில், டிப்ளமா படிப்புகளுக்கான செமஸ்டர் தேர்வுகளை, எம்.சி.க்யூ., எனும் 'மல்டிபிள் சாய்ஸ் கொஸ்டீன்ஸ்' முறையில் நடத்த, தொழில்நுட்ப கல்வி இயக்ககம் முடிவு செய்துள்ளது. தமிழக உயர் கல்வித் துறையின் தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தின் கீழ், 55 அரசு பாலிடெக்னிக் கல்லுாரிகள், 32 அரசு உதவி பெறும் பாலிடெக்னிக்குகள், 401 தனியார் பாலிடெக்னிக் கல்லுாரிகள் இயங்கி வருகின்றன. இந்த கல்லுாரிகளில் படிக்கும், 2 லட்சத்துக்கும் அதிகமான மாணவ - மாணவியருக்கு, எலக்ட்ரானிக்ஸ், சிவில், மெக்கானிக்கல் உட்பட தொழில் துறை சார்ந்த பாடங்கள் கற்பிக்கப் படுகின்றன. இங்கு படிக்கும் மாணவர்களுக்கு செய்முறை பயிற்சிகளை அதிகரித்து, மனப்பாடம் செய்யும் கல்வி முறையை குறைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதைத் தொடர்ந்து, செமஸ்டர் தேர்வு வினாத்தாள் வடிவமைப்பிலும், தொழில்நுட்ப கல்வி இயக்ககம் மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. இதுகுறித்து, உயர் கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது: தொழிற்கல்வி படிக்கும் மாணவர்களிடம், அவர்களுக்கு வேலை தரும் தொழிற்சாலைகள் அதிக திறனை எதிர்பார்க்கின்றன. அதற்கேற்ப, மாணவர்களின் திறன்கள் வளர வேண்டும். இதற்காக, டிப்ளமா படிக்கும் மாணவர்களுக்கு எழுத்து தேர்வை குறைத்து, செய்முறை பயிற்சிகளுக்கு அதிகளவு முக்கியத்துவம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வரும் அக்டோபர் மாதம் நடக்கும் செமஸ்டர் தேர்வில், மாணவர்களுக்கு எழுத்து தேர்வாக இல்லாமல், எம்.சி.க்யூ., முறையில், அதாவது ஒரு கேள்விக்கு பல பதில்கள் வழங்கப்பட்டு, அதில் சரியான பதிலை தேர்வு செய்யும் முறையில், கேள்வித்தாள் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதில், 1 மதிப்பெண், 2 மதிப்பெண் என, கேள்விகள் இடம் பெறும். இது தவிர, குறுகிய பதில்கள் அளிக்கும்படி, சில கேள்விகளும் இடம்பெறும். இதுகுறித்து, மாணவர்கள், பெற்றோர், கல்வியாளர்கள் என, பல தரப்பினரிடம் தொழில்நுட்ப கல்வி இயக்ககம் சார்பில் கருத்துகள் கேட்கப்பட்டு வருகின்றன. இந்த புதிய தேர்வு முறை, மாணவர்களின் சிந்தனையை வளர்க்கும். இவ்வாறு அவர்கள் கூறினர். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை