உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கைத்தறி நெசவாளர்களுக்கு தி.மு.க., அரசு துரோகம்! பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அறிக்கை:

கைத்தறி நெசவாளர்களுக்கு தி.மு.க., அரசு துரோகம்! பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அறிக்கை:

சென்னை:வழக்கமாக, பொங்கல் பண்டிகைக்கு இலவசமாக வழங்கப்படும் வேட்டி, சேலைகளின் ஒரு பகுதி கைத்தறி நெசவாளர்களிடமும், இன்னொரு பகுதி விசைத்தறியாளர்களிடமும் கொள்முதல் செய்யப்படும். கடந்த ஆண்டு, 73 லட்சம் வேட்டிகளும், 50 லட்சம் சேலைகளும் கைத்தறி நெசவாளர்களிடம் வாங்கப்பட்டன.இந்த முறை ஒட்டுமொத்த வேட்டி, சேலைகளையும் விசைத்தறியாளர்களிடம் வாங்க, தமிழக அரசு முடிவு செய்திருப்பது, கைத்தறி நெசவாளர்களுக்கு இழைக்கப்படும் பெரும் துரோகம். இதனால், கைத்தறி நெசவாளர்கள் பாதிக்கப்படுவர் என்பதை ஒப்புக்கொண்டுள்ள தமிழக அரசு, அதை ஈடுசெய்ய, முதியோர் ஓய்வூதியம் பெறுவோருக்கு வழங்கப்படும் வேட்டி, சேலைகளை முழுக்க முழுக்க கைத்தறி நெசவாளர்களிடம் வாங்க ஆணையிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இதை விட பெரிய ஏமாற்று வேலையும், மோசடியும் இருக்க முடியாது. கைத்தறி நெசவாளர்களிடமிருந்து ஒரு வேட்டி, சேலை கூட வாங்காமல், அனைத்து வேட்டி, சேலைகளும் கைத்தறி மற்றும் 'பெடல்' தறிகளில் உற்பத்தி செய்யப்படுவதாக, தமிழக அரசு கூறியிருப்பது மக்களை தவறாக வழிநடத்தும் செயல். இதற்காக, மக்களிடம் தமிழக அரசு மன்னிப்பு கேட்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

நெசவாளர்கள் வாழ்வில் எவ்வித பாதிப்பும் இல்லை

கைத்தறி துறை அமைச்சர் காந்தி அறிக்கை:பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், பொங்கல் பண்டிகைக்கு, ஏழை மக்களுக்கு வழங்குவதற்கான இலவச வேட்டி சேலைகளை, விசைத்தறி நெசவாளர்களிடம் இருந்து வாங்கி இருப்பதாக தெரிவித்துள்ளார். தமிழகத்தில் உள்ள 1,114 கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில், 114 சங்கங்களை சேர்ந்த, 12,831 கைத்தறி நெசவாளர்கள் மட்டும், வேட்டி சேலை உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றனர்.எஞ்சிய கைத்தறி நெசவாளர்கள், கோ - ஆப்டெக்ஸ் மற்றும் வெளி சந்தைக்கான ரகங்களின் உற்பத்தியில் ஈடுபடுகின்றனர். கடந்த ஆண்டில் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள், 1,241 கோடி ரூபாய் மதிப்புள்ள ஜவுளிகளை விற்பனை செய்துள்ளன. இதில், 14 சதவீதம் மட்டுமே அரசு திட்டங்களுக்கு விற்கப்பட்டுள்ளது. மற்றவை கோ - ஆப்டெக்ஸ் மற்றும் வெளிச்சந்தையில் விற்கப்பட்டுள்ளன.நடப்பாண்டு தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகைக்கும், முதியோர் ஓய்வூதிய திட்டத்திற்கும், வேட்டி, சேலை உற்பத்தி செய்யும் பணியை, கைத்தறி நெசவாளர்களுக்கு வழங்கி, கோ - ஆப்டெக்ஸ் வழியாக கொள்முதல் செய்ய, அரசு உத்தரவிட்டுள்ளது.இதனால், கைத்தறி நெசவாளர்களுக்கு வழங்கப்படும் உற்பத்தி திட்டத்தின் எண்ணிக்கையிலோ, நெசவுக் கூலியிலோ எவ்வித குறையும் ஏற்பட வாய்ப்பில்லை. ராமதாஸ் கூறுவதுபோல், நெசவாளர்களின் வாழ்வாதாரத்தில் எவ்வித பாதிப்பும் ஏற்படாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி