உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அரசு ஊழியர்களுக்கு மன்னிக்க முடியாத துரோகத்தை செய்த தி.மு.க., அரசு; சீமான் குற்றச்சாட்டு

அரசு ஊழியர்களுக்கு மன்னிக்க முடியாத துரோகத்தை செய்த தி.மு.க., அரசு; சீமான் குற்றச்சாட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ஓய்வூதிய இயக்குநரகத்தை கலைத்ததன் மூலம் பழைய ஓய்வூதியத் திட்டத்தை எந்த காலத்திலும் கொண்டுவர முடியாத கொடுஞ்சூழலை உருவாக்கிய தி.மு.க., அரசு மிகப்பெரிய அநீதியை அரசு ஊழியர்களுக்கு இழைத்து விட்டதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சாட்டியுள்ளார்.

கொடுங்கோன்மை

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்தாமல் தி.மு.க., அரசு தொடர்ந்து காலம் தாழ்த்திவருவது வன்மையான கண்டனத்திற்குரியது. கடந்த சட்டசபைத் தேர்தலின்போது ஆட்சிக்கு வந்தவுடன் பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று வாக்குறுதி அளித்த தி.மு.க., ஆட்சிப் பொறுப்பேற்று மூன்றரை ஆண்டுகளைக் கடந்தும் இன்றுவரை நிறைவேற்ற மறுத்து அரசு ஊழியர்களின் வயிற்றில் அடிப்பது சிறிதும் மனச்சான்றற்ற கொடுங்கோன்மையாகும்.கடந்த 2003ம் ஆண்டு ஏப்ரலில் பணியில் சேர்ந்த அரசு ஊழியர்கள் அனைவரும் 'பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம்' எனப்படும் புதிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் வலுக்கட்டாயமாகக் கொண்டுவரப்பட்டனர். இதனால், அரசு ஊழியர்களுக்கு அதுவரை கிடைத்து வந்த பணிக்கொடை, ஓய்வூதியம் என்று எதுவும் முழுமையாகக் கிடைக்காமல் போய்விட்டது. அதற்கு மாறாக, பணியின்போது அரசு ஊழியர்களிடம் பிடித்தம் செய்யப்படும் தொகை மட்டும், அவர்கள் ஓய்வு பெற்றதும் திருப்பி வழங்கப்படும் என்றும் அன்றைய அ.தி.மு.க., அரசு அறிவித்தது. ஆனால் தொடக்கம் முதலே இத்திட்டத்துக்கு அரசு ஊழியர்கள் தொடர்ந்து கடுமையான எதிர்ப்பினைத் தெரிவித்து வந்தனர். அரசு ஊழியர்களின் 13 ஆண்டுக்காலப் போராட்டத்திற்குப் பிறகு, கடந்த 2016ம் ஆண்டு அன்றைய முதல்வர் ஜெயலலிதா, பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய வல்லுநர் குழு ஒன்றை அமைத்தார். அக்குழு அமைக்கப்பட்ட 4 மாதங்களுக்குள் தனது அறிக்கையை அரசிடம் அளிக்கும் என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், மூன்று ஆண்டுகால தாமதத்திற்குப் பிறகு வல்லுநர் குழு தனது ஆய்வு அறிக்கையை 2018 ஆண்டு தான் தமிழக அரசிடம் அளித்தது.

தொடர்கதை

ஆனால், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அன்றைய அ.தி.மு.க., அரசு, வல்லுநர் குழு அறிக்கையை வெளிப்படையாகத் தெரிவிக்காமல் கிடப்பில் போட்டது. அதன்பின், சென்னை ஐகோர்ட், 2018ம் ஆண்டு டிசம்பர் மாதம் வல்லுநர் குழு அறிக்கையை நீதிமன்றத்தில் அளிக்க உத்தரவிட்டதையடுத்து, வேறு வழியின்றி, 2019 ஜனவரி மாதம் அறிக்கையை வெளியிட்ட தமிழக அரசு, மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தைச் செயல்படுத்த வாய்ப்பில்லை என்று கைவிரித்தது. இதனால் அரசு ஊழியர்களின் கண்ணீர்ப் போராட்டம் மீண்டும் தொடர்கதையானது.

பச்சைத் துரோகம்

இதற்கிடையில், கடந்த 2021ம் ஆண்டு சட்டசபை தேர்தலின் போது, ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும் என்று வாக்குறுதியளித்து அனைத்து அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் பெருமக்களின் முழு ஆதரவைப் பெற்று ஆட்சியைப் பிடித்த தி.மு.க.., ஆட்சிக்கு வந்த உடனேயே பழைய ஓய்வூதியத் திட்டத்தை அறிவிக்கும் என்று ஆவலோடு அரசு ஊழியர்கள் அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருந்தனர். ஆனால், ஆட்சி அதிகாரத்தை ஏமாற்றிப் பிடித்துவிட்டோம் என்ற இறுமாப்போடு, ஆட்சிக்கு வந்து ஓராண்டு நிறைவுபெறும் நாளில், பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட சாத்தியமே இல்லை என்று கடந்த 2022ம் ஆண்டு மே மாதம் சட்டப்பேரவையிலேயே அறிவித்து, நம்பியிருந்த அரசு ஊழியர்களை ஏமாற்றியது 'திராவிட மாடல்' தி.மு.க., அரசு. எதிர்க்கட்சியாக இருந்தபோது அரசு ஊழியர்களின் போராட்டத்தை ஆதரிப்பதுபோல் நடித்த தி.மு.க., ஆட்சிக்கு வந்த பிறகு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியாது என்று கூறி ஏமாற்றி வருவது அரசு ஊழியர்களுக்குச் செய்யும் பச்சைத் துரோகமாகும்.இந்தியாவில் பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட வாய்ப்பே இல்லை என்று கூறப்பட்ட நிலையில், மேற்கு வங்க மாநிலம் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்தியது. அதைத் தொடர்ந்து, ராஜஸ்தான், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், பஞ்சாப் ஆகிய மாநிலங்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு மாறிவிட்டன. அந்த வரிசையில் ஆறாவது மாநிலமாக ஆட்சிப் பொறுப்பேற்ற அடுத்த நாளே ஹிமாசலப் பிரதேச புதிய அரசு தமது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், தற்போது புதிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் பணியாற்றும் ஒன்றரை லட்சம் பணியாளர்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு மாற்றப்படுவார்கள் என்று உறுதியுடன் அறிவித்தது. ஆனால் தமிழகத்தில் அரசு ஊழியர்கள் பழைய ஓய்வூதிய முறையை மீண்டும் நடைமுறைப்படுத்தக்கோரிப் போராட்டத்தை முன்னெடுக்கும் ஒவ்வொரு முறையும் தமிழகத்தை மாறிமாறி ஆண்ட இரு திராவிட அரசுகளும் ஆட்சி, அதிகாரப் பலம் கொண்டு அவர்களை அடக்கி ஒடுக்கியும், பணியிடை நீக்கம் என அச்சுறுத்தியும் அவர்களது போராட்டத்தை, நீர்த்துப்போகச் செய்து வருவது கொடுங்கோன்மையாகும்.

எதிர்க்கட்சி நிரந்தரம்

இருப்பினும், தங்களின் நியாயமான கோரிக்கை என்றேனும் ஒருநாள் நிறைவேறும் என்ற நம்பிக்கையுடன் அரசு ஊழியர்கள் இருந்து வந்தனர். ஆனால், தி.மு.க., அரசு அதனையும் கெடுக்கும் வகையில் ஓய்வூதிய இயக்குநரகம் கலைக்கப்பட்டு கருவூலங்கள் கணக்குத்துறையுடன் இணைக்கப்படும் என்ற தி.மு.க., அரசின் புதிய அறிவிப்பு அரசு ஊழியர்களின் தலையில் பேரிடியாக இறங்கியுள்ளது. ஓய்வூதிய இயக்குநரகத்தை கலைத்ததன் மூலம் பழைய ஓய்வூதியத் திட்டத்தை எந்த காலத்திலும் கொண்டுவர முடியாத கொடுஞ்சூழலை தி.மு.க., அரசு உருவாக்கியுள்ளது. அரசு ஊழியர்களுக்குச் செய்கின்ற மிகப்பெரிய அநீதியாகும். இதன் மூலம் எக்காலத்திலும் மன்னிக்க முடியாத மாபெரும் துரோகத்தை அரசு ஊழியர்களுக்கு தி.மு.க., அரசு செய்துள்ளது. எதிர்க்கட்சியாக இருந்தால் மட்டும்தான் அரசு ஊழியர்களுக்கு ஆதரவாகச் செயல்படுவோம், ஆட்சி அதிகாரத்தில் இருந்தால் மக்களுக்கும், மண்ணிற்கும் பெருந்துரோகத்தை மட்டும்தாம் செய்வோமென்றால் தி.மு.க.,வை நிரந்தரமாக எதிர்க்கட்சி வரிசையில் அமர வைக்கவும் அரசு ஊழியர்களும், ஆசிரியர் பெருமக்களும் ஆயத்தமாகிவிட்டனர். ஆகவே, தி.மு.க., அரசு இதற்கு மேலும் அரசு ஊழியர்களின் வயிற்றில் அடிப்பதை நிறுத்தி, தங்களின் உழைப்புக்கான வாழ்வாதார உரிமைக்காக 20 ஆண்டுக் காலமாகப் போராடிவரும் அரசு ஊழியர்களின் மிக நியாயமான கோரிக்கையான பழைய ஓய்வூதிய முறையை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டுமென்று இவ்வறிக்கையின் வாயிலாக வலியுறுத்துகிறேன், இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

தாமரை மலர்கிறது
நவ 21, 2024 19:59

பிஜேபி செய்யவேண்டிய எதிர்க்கட்சி வேலையை சைமன் செய்துவருகிறார். பிஜேபி தூங்கிக்கொண்டிருப்பது துரதிர்ஷ்டத்தனமானது. சைமனுக்கு வெளிச்சம் காட்ட தேவை இல்லை. வளர்த்த கடா மார்பில் பாய்வது போன்று ஒருநாள் பாய்வார்.


வைகுண்டேஸ்வரன்
நவ 21, 2024 16:44

2026 ல் பாஜகவுடன் கூட்டணி வைக்கப்பபோகிறவர்களின் அறிக்கை இங்கே டெய்லி வரும். சீமான், அன்புமணி, ராமதாஸ் இதில் முக்கியமானவர்கள். அவங்க என்ன சொல்றாங்க என்பதல்ல, அவங்க திமுக அரசைத் திட்டுவாங்க, அதைப் போடணும். அவ்ளோ தான்.


Ramesh Sargam
நவ 21, 2024 13:05

பதவியில் நீடிக்க தி.மு.க.,வுக்கு தகுதி இல்லை: அன்புமணி. திமுகவுக்கு எதிர்ப்பு நாளுக்குநாள் அதிகமாகுகிறது.


Ms Mahadevan Mahadevan
நவ 21, 2024 12:25

அரசியல் கட்சிகளால் மக்கள் ஏகப்பட்ட துரோகங்களை சந்தித்து கொண்டு தான் இருக்கிறார்கள். அதில் யாருக்கும் சந்தேகம் இல்லை


sundarsvpr
நவ 21, 2024 12:20

தில்லு மல்லு கழகத்தில் குடும்ப ஆட்சி மறைந்த பிறகு தான் அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சி ஆரம்பம். ஆனால் மறைய வாய்ப்புஇல்லை. முரசுஒலி படிப்பவர்கத்தான் பெருமளவு அரசு ஊழியர்கள்.


MADHAVAN
நவ 21, 2024 12:19

அரசு செய்த்து நல்ல காரியம்தான், எனக்கு தெரிந்து ஒருகிலவன் 25 வருசமா ஓய்வு ஊதியம் வாங்குறான், மாசம் 30000 முப்பதாயிரம் அந்த கிழவன் ரிட்டயர்டு ஆகும்போது அவன் வாங்கிய சம்பளம் 12000 மட்டுமே, இவனுங்களுக்கே அல்லி கொடுத்தா ? அரசாங்கம் எப்படிடா நாட்டு மக்களுக்கு நல்லது செய்யமுடியும், மூடனுங்களா


hari
நவ 21, 2024 13:18

அப்போ ஓட்டு வாங்க செய்த சத்தியம் பொய்யா கோபால்.......


தர்மராஜ் தங்கரத்தினம்
நவ 21, 2024 11:55

தமிழனுக்கு துரோகிகளிடம் ஏமாறுவது என்றால் மிகவும் பிடிக்கும் .........


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை