கருணாநிதி பெயரை உச்சரித்த எம்.எல்.ஏ., மீது தி.மு.க., பாய்ச்சல்
சென்னை; சட்டசபையில் பேசிய அ.தி.மு.க., --- எம்.எல்.ஏ., முனுசாமி, முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரை குறிப்பிட்டதற்கு, அமைச்சர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.சட்டசபையில், பட்ஜெட் மீதான விவாதத்தை நேற்று துவக்கி வைத்துப் பேசிய, அ.தி.மு.க., - கே.பி.முனுசாமி, 'முன்னாள் முதல்வர் கருணாநிதி' என்று குறிப்பிட்டார். அதற்கு அமைச்சர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.அப்போது நடந்த விவாதம்:அமைச்சர் வேலு: மறைந்த அ.தி.மு.க., தலைவியை, அம்மையார் என்றுதான் தி.மு.க., தரப்பில் பேசுகிறோம். இதுபோன்ற பிரச்னை ஏற்கனவே ஒருமுறை வந்த போது, சபை முன்னவர் துரைமுருகன் பேசி, இனி மறைந்த இரு தலைவர்களின் பெயரை சொல்ல வேண்டாம் என்று தீர்மானிக்கப்பட்டது. எனவே, நீக்கமற நிறைந்திருக்கும் தலைவரை பெயரிட்டு சொல்வதை விட, அடைமொழியை சொன்னால் நன்றாக இருக்கும்.சபாநாயகர் அப்பாவு: முன்னாள் முதல்வர் பெயரை குறிப்பிட்டு பேசியதை, கலைஞர் என்று திருத்திக் கொள்கிறேன்.கே.பி.முனுசாமி: அதை உத்தரவாக போட முடியாது.அமைச்சர் துரைமுருகன்: மறைந்த தலைவர்களுக்கு நாம் மதிப்பு கொடுத்து வருகிறோம். அ.தி.மு.க., தலைவரை, அம்மையார் என்று தான் கூறுகிறோம். எனவே, மூத்த தலைவர்களை மரியாதையாக அழைப்போம். அதை முனுசாமி ஏற்பார் என்று நம்புகிறேன்.முனுசாமி: நானும் திராவிட இயக்கத்தில் இருந்து வந்தவன் தான். அண்ணாதுரையை ஏற்றுக்கொண்ட காலக்கட்டத்தில் கருணாநிதியையும் ஏற்றுக் கொண்டவர்கள் தான். கருத்து வேறுபாடு வந்தபின், தனி பாதையை தேர்ந்தெடுத்தோம். அதற்காக உரிமையை விட்டுக்கொடுக்க முடியாது.சபாநாயகர் அப்பாவு: நாகரிகமாக பேசுவதற்கு தான் உரிமையே தவிர, நினைத்ததை எல்லாம் பேசுவதற்கு அல்ல.இவ்வாறு விவாதம் நடந்தது.