உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வார்டுக்கு 10 வீதம் 1,000 மகளிர் குழுக்கள் கட்சியினரை முடுக்கிய தி.மு.க., தலைமை

வார்டுக்கு 10 வீதம் 1,000 மகளிர் குழுக்கள் கட்சியினரை முடுக்கிய தி.மு.க., தலைமை

கோவை:வரும், 2026 சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள, பெண்களை கவர்வதற்காக, கோவையில் மட்டும் வார்டுக்கு 10 வீதம், 1,000 மகளிர் குழுக்கள் உருவாக்க உத்தரவிடப்பட்டு இருக்கிறது. அக்குழுவினருக்கு, தமிழக துணை முதல்வர் உதயநிதி தலைமையில் பிரமாண்டமாக விழா நடத்தி, வங்கி கடன் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.கடந்த, 2021 சட்டசபை தேர்தலில் அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்படும் என, தி.மு.க., தேர்தல் வாக்குறுதி அளித்தது. ஆட்சிக்கு வந்தபின், தகுதியுள்ள பெண்களுக்கு மட்டும் வழங்கப்படுகிறது. கடந்த சில மாதங்களாக பயனாளிகள் மீண்டும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு, நிபந்தனையை மீறியவர்கள் அடையாளம் காணப்பட்டு, நீக்கப்பட்டு வருகின்றனர். நிதியுதவி கிடைக்காத பெண்களும், நீக்கப்படும் பெண்களும் அதிருப்தியில் இருக்கின்றனர்.இதுதவிர, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்து உயர் கல்வி கற்கும் மாணவ - மாணவியருக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்படுகிறது. இருப்பினும், இலவச லேப்-டாப் வழங்கும் திட்டத்தை நிறுத்தியதால், மன வருத்தத்தில் இருக்கின்றனர். இதுபோன்ற அதிருப்திகளை களையவும், 2026 தேர்தலை எதிர்கொள்ள, பெண்களை கவர்வதற்காகவும் புதிதாக சுய உதவிக்குழுக்கள் உருவாக்கி, வங்கிகள் மூலம் கடன் வழங்க திட்டமிடப்பட்டு உள்ளது.கோவை மாநகராட்சியில், 100 வார்டுகள் உள்ளன. ஒவ்வொரு வார்டிலும் புதிதாக தலா, 10 வீதம், 1,000 குழுக்கள் உருவாக்க வேண்டும். ஒரு குழுவில் குறைந்தபட்சம், 10 பேர்; அதிகபட்சமாக, 15 பேர் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. ஒவ்வொரு வார்டிலும் குழுக்கள் உருவாக்கும் பொறுப்பு, அந்தந்த பகுதிகளை சேர்ந்த ஆளுங்கட்சி கவுன்சிலர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.அதன்படி, குழுவுக்கு, 10 பேர் வீதம் நியமித்து, 1,000 குழுக்களுக்கு, 10 ஆயிரம் உறுப்பினர்கள் சேர்த்திருக்க வேண்டும். அவர்களுக்கு வங்கி கடன் ஏற்பாடு செய்யப்படும். கோவைக்கு துணை முதல்வர் உதயநிதியை வரவழைத்து, மகளிர் குழுவினருக்கு கடன் வழங்கும் முகாமை பிரமாண்டமாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. வரும், 8ம் தேதிக்குள் குழுக்களை உருவாக்க அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.இதே போல, மற்ற மாவட்டங்களிலும் மகளிர் குழுக்களை உருவாக்கவும் தி.மு.க., தலைமை திட்டமிட்டுள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் கூறின.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி