ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தி.மு.க., கூட்டணிக்கு மார்க்சிஸ்ட் ஆதரவு
சென்னை:''ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், தி.மு.க., கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவு தரப்படும்'' என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலர் சண்முகம் தெரிவித்தார்.சென்னை தி.நகரில் உள்ள, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமை அலுவலகத்தில், புதிதாக மாநில செயலராக சண்முகம் பொறுப்பேற்றார்.அதன்பின் அவர் அளித்த பேட்டி:மத்திய அரசு கடைபிடிக்கும், அராஜக போக்கின் விளைவாக, வேலையின்மை கடுமையான பிரச்னையாக இருந்து வருகிறது. பல்கலை துணைவேந்தர் தேடுதல் குழுவில், மாநில அரசுக்கு இருக்கிற உரிமையை, திரும்ப பெற்றுக் கொண்டு, கவர்னரே் முடிவெடுக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது. இது அராஜகத்தின் உச்சம். இதை உடனே திரும்பப் பெற வேண்டும்.தி.மு.க., அரசு, கடந்த 3 ஆண்டுகளில், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளது. சொல்லாத வாக்குறுதிகளையும் நிறைவேற்றி உள்ளனர்.மீதமுள்ள வாக்குறுதிகளையும் நிறைவேற்ற வேண்டும். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், தி.மு.க., தலைமையிலான மத சார்பற்ற முற்போக்கு கூட்டணியில், யார் வேட்பாளராக நிறுத்தப்பட்டாலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆதரவு அளிக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.