சட்டசபை தேர்தலுக்கு 234 தொகுதிகளில் தி.மு.க., சர்வே: வேட்பாளர்கள் தேர்வுக்காக நடவடிக்கை
தமிழகத்தில், 234 சட்டசபை தொகுதிகளில் எடுத்த, 'சர்வே' அடிப்படையில், தி.மு.க.,வில் வேட்பாளர் தேர்வும், மாவட்டச் செயலர்கள் மாற்றமும், நடக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.சமீபத்தில், 'இந்தியா டுடே, சி வோட்டர்' வெளியிட்ட கருத்து கணிப்பில், 'கடந்த லோக்சபா தேர்தலில் தி.மு.க., கூட்டணி, 47 சதவீத ஓட்டுகளை பெற்றிருந்தது. 'தற்போது தேர்தல் நடந்தால், 52 சதவீத ஓட்டுகளைப் பெறலாம்' என, தெரிவிக்கப்பட்டிருந்தது. இது, தி.மு.க.,வினரை மகிழ்ச்சியில் ஆழ்த்திஉள்ளது.எதிர்க்கட்சிகளிடம் ஒற்றுமை இல்லாததால், 200 தொகுதிகளில் வெற்றி பெற, தி.மு.க., இலக்கு நிர்ணயித்துள்ளது. அதை செயல்படுத்துவதற்காக, 234 சட்டசபை தொகுதிகளில், ஆளுங்கட்சிக்கு சொந்தமான நிறுவனம், 'சர்வே' எடுத்துள்ளது.கடந்த நான்கு ஆண்டு கால தி.மு.க., ஆட்சியில், சிட்டிங் எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் கூட்டணி கட்சிகளின் எம்.எல்.ஏ.,க்களின் செயல்பாடு, தொகுதிகள் நிலவரம் குறித்து அந்த, 'சர்வே' எடுக்கப்பட்டுள்ளது. எந்தெந்த தொகுதியில், தற்போதைய எம்.எல்.ஏ.,க்களுக்கு, வெற்றி வாய்ப்பு இல்லை; மாவட்டச் செயலர்களுடன் ஏற்பட்டுள்ள மோதல் ஆகியவை குறித்தும் விபரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.உதாரணமாக, தேனி வடக்கு மாவட்டச் செயலர் தங்கத்தமிழ்செல்வன் எம்.பி.,க்கும், தேனி தெற்கு மாவட்டச் செயலர் கம்பம் ராமகிருஷ்ணன் எம்.எல்.ஏ.,வுக்கும், இடையிலான மோதல் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. இவர்களின் மோதல் காரணமாக, தேனி மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டசபை தொகுதிகளிலும், தி.மு.க.,வுக்கு தோல்வி தான் மிஞ்சும் என, சர்வே அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, அவர்கள் இருவரிடமிருந்து மாவட்டச் செயலர்கள் பதவியை பறித்து, புதிய பொறுப்பாளர்களை நியமிக்க, மூத்த அமைச்சரிடம், முதல்வர் ஸ்டாலின் ஆலோசித்துள்ள தகவல் வெளியாகி உள்ளது.இதுகுறித்து, தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது: வரும் 2026 சட்டசபை தேர்தலுக்கு வியூகம் அமைக்கும் பணிகளை, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு தேர்தல் பணியாற்றிய நிறுவனம், ஐபேக் நிறுவனம், ஆளுங்கட்சிக்கு சொந்தமான நிறுவனம் என, மூன்று நிறுவனங்கள் மேற்கொள்கின்றன.முதற்கட்டமாக, தற்போதைய எம்.எல்.ஏ.,க்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு, ஒவ்வொரு எம்.எல்.ஏ., குறித்தும் நான்கு பக்க அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை, தொகுதிவாரியாக பிரிக்கப்பட்டு, முதல்வரின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.சர்வே அடிப்படையில், பிரச்னைக்குரிய மாவட்டச் செயலர்களை மாற்றி, புதிய பொறுப்பாளர்களை நியமிக்கும் பணிகளை, ஸ்டாலின் செய்து வருகிறார். இந்த பணி முடிவடைந்ததும், மற்ற இரண்டு நிறுவனங்களிடமிருந்து அறிக்கை பெற்ற பின், வேட்பாளர் தேர்வு பணியை முதல்வர் துவக்குவார். இவ்வாறு கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. - நமது நிருபர் -