ஈரோடு கிழக்கில் களமிறங்குகிறது தி.மு.க., உதயநிதி விருப்பம் குறித்து செயற்குழு முடிவு
ஈரோடு கிழக்கு தொகுதியை மீண்டும் காங்கிரசுக்கே கொடுத்து விடலாம் என, முதல்வர் ஸ்டாலின் விரும்பும் நிலையில், தி.மு.க., களமிறங்க வேண்டும் என, துணை முதல்வர் உதயநிதி கருதுகிறார். எந்த கட்சி போட்டியிடுவது என்பது குறித்து, நாளை நடக்கும் செயற்குழுவில் முடிவு எடுக்க, தி.மு.க., திட்டமிட்டுள்ளது.இந்த தொகுதிக்கு ஏற்கனவே நடந்த இடைத்தேர்தலின்போது, காங்கிரஸ் சார்பில் போட்டியிட, ஈரோடு மாவட்ட காங்கிரஸ் தலைவர் மக்கள் ராஜன் விரும்பினார். சமூக சேவையில் ஈடுபாடு கொண்டவர் என்பதால், அவரை வேட்பாளராக அறிவிக்க, காங்கிரஸ் மேலிடம் முன்வந்தது. ஆனால், தி.மு.க., தலைமையின் வலியுறுத்தல்படி, கடைசி நேரத்தில், இளங்கோவன் போட்டியிட்டார். இந்நிலையில் நேற்று, ஈரோடு மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதல்வர் ஸ்டாலினை சந்திக்க, அம்மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் காத்திருந்தனர். அப்போது, மக்கள் ராஜன் மற்றும் ஆதித் தமிழர் பேரவை தலைவர் அதியமான் ஆகியோரை மட்டும் முதல்வர் சந்தித்தார்; அவர்கள் வழங்கிய பரிசு புத்தகங்களை பெற்றுக் கொண்டார். வரும் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி தொடர வேண்டும் என, முதல்வர் ஸ்டாலின் விரும்புவதால், மீண்டும் இந்த தொகுதியை காங்கிரசுக்கு ஒதுக்கி விடலாம் என, அவர் கருதுகிறார். ஆனால், துணை முதல்வர் உதயநிதி, அமைச்சர்கள் முத்துசாமி, செந்தில் பாலாஜி உள்ளிட்டோர், தி.மு.க., களமிறங்க வேண்டும் என மல்லுகட்டுகின்றனர். முன்னாள் எம்.எல்.ஏ., சந்திரகுமார், ஈரோடு மேயர் நாகரத்தினம் கணவரும், மாநகர செயலருமான சுப்பிரமணியம், மாவட்ட துணை செயலர் செல்ல பொன்னி, நெசவாளர்கள் அணி நிர்வாகி சச்சிதானந்தம் உட்பட 10க்கும் மேற்பட்டோர், தி.மு.க.,வில், 'சீட்' பெற ஆர்வம் காட்டுகின்றனர்.இச்சூழலில், ஈரோடு கிழக்கு யாருக்கு என்பது குறித்து, சென்னையில் நாளை நடக்கும் செயற்குழுக் கூட்டத்தில் விவாதித்து முடிவெடுக்க உள்ளதாக, அறிவாலய வட்டாரத்தில் கூறப்படுகிறது.
கூட்டணி தலைவர்களுடன் பேசிநல்ல முடிவெடுக்கப்படும்
வரும் 2026 சட்டசபை தேர்தலில், 200 தொகுதிகளை வெல்ல இலக்கு நிர்ணயித்திருந்தோம். ஈரோடு கள ஆய்வுக்கு பின், 200ஐ தாண்டுவோம் என்ற எண்ணம், உணர்வு ஏற்பட்டிருக்கிறது. இடைத்தேர்தலில், ஈரோடு கிழக்கு தொகுதி தி.மு.க., கூட்டணி வசமாகும். மீண்டும் காங்கிரசுக்கு ஒதுக்கப்படுமா என்பது தொடர்பாக, கூட்டணி கட்சிகளின் தலைவர்களுடன் ஆலோசித்து நல்ல முடிவெடுக்கப்படும்.ராகுல் மீது போடப்பட்டுள்ள வழக்கை, அவர் சட்டப்படி எதிர்கொள்வார். 'ஒரே நாடு; ஒரே தேர்தல்' என்பது கொடுமையான முடிவு; ஜனநாயகத்தை படுகுழியில் தள்ளும் மோசமான செயல். அம்பேத்கர் குறித்து அமித் ஷா பேசியது தொடர்பாக, 'இண்டியா' கூட்டணி தலைவர்களுடன் பேசி, அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்போம்.ஸ்டாலின், தமிழக முதல்வர் - நமது நிருபர் -