உனக்கு அறிவே இல்லை என யாராவது சொல்கின்றனரா?
பீஜாக் ஷரம் ஏற்படுத்திய மாற்றத்தை புரிந்து கொள்வோம்!ஸ்ரீதேவியை வழிபடுவதற்குரிய திருநாமங்களுடன் பீஜாக் ஷரம் என்று வழங்குகின்றனர். ஓம் க்லீம் ஹ்ரீம் போலுள்ள எழுத்துக்களையும் சேர்த்து கூறுதல் ஆன்றோர் மரபு. அந்த பீஜாக் ஷரங்களுள் சிலவற்றை கூறினாலும் பெரும் பயன் கிடைக்கும் என்பதை வலியுறுத்துவது கீழ்காணம் உபாக்கியானம்.கோசல தேசத்தில் தேவதத்தன் என்ற பிராமணன், நெடுநாட்களாக பிள்ளைப் பேறு இல்லாமல் வருந்தினான். மகப்பேற்றின் பொருட்டு தமஸா நதிக்கரையில் புத்திர காமேஷ்டி யாகம் செய்ய முற்பட்டான். அவன் ஹோம தண்டங்களை அமைத்தான்; மூன்று விதமான அக்னிகளை எழுப்பினான். தக்கவர்களை வைத்து வேதம் சொல்ல ஏற்பாடு ஆனது. கோபிலர் என்ற மகரிஷியை, சாமகானம் பாட ஏற்பாடு செய்தான். வயதானபடியால் அவருக்கு சாமகானத்தை மூச்சிழுத்துப் பாட இயலவில்லை. கோபத்தால் நிதானமிழந்த தேவதத்தன், அம்முனிவரை நோக்கி, 'அறிவிலியை போல் இப்படி அபஸ்வரமாக கானம் செய்கிறீரே?' என்று கேட்டு விட்டான்.அம்முனிவர் கடுஞ்சினம் கொண்டு, 'என் வயது முதிர்ச்சியை கவனத்தில் கொள்ளாமல், நீ என்னை அறிவிலி என்று இகழ்ந்து கூறினாய். எனவே, உனக்கு அறிவிலியான புதல்வன் பிறப்பானாக' என்று சாபம் கொடுத்தார். முனிவரின் சாபமொழியை கேட்ட தேவதத்தன் நடுநடுங்கி, 'சுவாமி... இப்படி சாபம் கொடுக்கலாமா... திவசம் செய்யும்போது கூட, அறிவிலியான பிராமணனுக்கு அன்னம் வேண்டுமானாலும் அளிக்கலாமே அன்றி, தானம் செய்யக்கூடாதே... அப்படியிருக்க என் குழந்தையின் கதி என்ன?' என்று கூறி கண்ணீர் விட்டு கதறினான்.முனிவரின் சினம் தணிந்து விட்டது. உடனே அவர், 'உன் மகன், சில ஆண்டுகளுக்கு பின் சிறந்த மேதை ஆவார்' என்று அருள் செய்தார்; யாகம் முடிந்தது.பின், தேவதத்தனின் மனைவி ரோகிணி கருவுற்று, உரிய காலத்தில் ஆண் குழந்தையை பெற்றெடுத்தாள்; குழந்தையும் வளர்ந்தது. ஆனால், அக்குழந்தை பரம மூடனாக இருந்தது. தன் மகன் முட்டாளாக இருத்தலை கண்ட தேவதத்தன், பெருந்துன்பம் அடைந்து, 'மூடப் பிள்ளைகளை பெறுவது, சாவை விடக் கொடியது. ஆதலின் இவனை பலரும் இகழ்ச்சி செய்வதை கண்டு வருந்துவதை காட்டிலும், இவனை காட்டில் விடுவதே நல்லது' என்று முடிவு செய்து, அப்பிள்ளையை காட்டில் விட்டான்.காட்டில் அந்த சிறுவன், தன் மூடத்தனத்தை நினைத்து வருந்தி, தனக்கு ஒன்றும் தெரியவில்லையே என்று துக்கமடைந்து, 'இனி நான் பொய்யே சொல்ல மாட்டேன்' என்று விரதம் பூண்டான். உண்ணல், உறங்கல் என்னும் இரண்டை மட்டும் மேற்கொண்டு, பொய்யே கூறாத காரணத்தால் அவனுக்கு சத்தியதவன் என்று பெயர் அமைந்தது. பதினான்கு ஆண்டுகள் கழிந்தன. அவனுடைய நல்வினை பயனாக நவராத்திரி காலம் வந்தது. அது நவராத்திரி காலம் என்பது சத்தியதவனுக்கு தெரியாது.அக்காட்டில் ஒரு வேடன், பன்றியை அம்பால் எய்தான். அடிபட்ட பன்றி வேகமாக ஓடி வந்து, சத்தியதவன் வசித்து வந்த குடிசைக்குள் மறைந்து கொண்டது. பன்றியை துரத்தி வந்த வேடன், ஆசிரமத்தில் இருக்கும் சத்தியதவனை பார்த்து, 'இங்கு ஒரு பன்றி வந்ததா? அதை கொன்று சாப்பிடுவது என் குல தர்மம். நான் பொய் சொல்லவில்லை; நீயும் பொய் சொல்லக்கூடாது' என்று வினவினான். இதைக் கேட்ட சத்தியதவன், 'இங்கு பன்றி இருக்கிறது என்று கூறினால், சத்தியம் ஆகாது. ஏனெனில், அதனால் ஹிம்சை ஏற்படுகிறது. வாய்மை எனப்படுவது பிற உயிர்களுக்கு தீங்கு தராத சொல்லாக இருத்தல் வேண்டும். பன்றி இல்லை என்றாலோ, இவன் பட்டினியாக போகும் பாவம் நம்மை சேரும். இந்தப் பன்றி உறுமுகிற, 'ஹ்ரும் ஹ்ரும்' என்ற ஓசையோ, என்னை உணர்ச்சிக்கு உள்ளாக்குகிறதே' என்று எண்ணினான்.நவராத்திரி காலத்தில் அம்பாளின் பீஜாக் ஷரத்தின் பகுதியான, 'ஹ்ரும்' என்ற ஓசை சத்தியதவனின் காதில் விழுந்த காரணத்தால், அவனுக்கு உடனே ஞானம் உண்டாகி விட்டது. எனவே, அவன் அவ்வேடனை நோக்கி, 'எவன் பார்க்கிறானோ, அவன் சொல்ல மாட்டான்; எவன் சொல்கிறானோ அவன் பார்க்க மாட்டான். தன் வேலையிலேயே குறிப்புள்ள வேடனே... நீ அடிக்கடி என்ன சத்தம் கேட்கிறாய் இப்போது?' என்று கேட்டான். அவ்வுரையைக் கேட்ட வேடன், ஒன்றும் பதில் கூறாமல் சென்று விட்டான்.சத்தியதவன் பீஜாக் ஷர உச்சாடன மகிமையால், அறியாமை நீங்கி, பெரும் புலமை பெற்றான். அவனுடைய பெற்றோர் இருவரும் வந்து, பெருமகிழ்ச்சியுடன் அவனை தம் இருப்பிடத்திற்கு அழைத்து சென்றனர்.பன்றி உறுமிய ஒலிக் குறிப்பை, நவராத்திரி காலத்தில் கேட்ட மூடனான பிராமண சிறுவன், மிகப் பெரிய புலமை பெற்றான். பீஜாக் ஷரத்தின் மகிமை இத்தகையது எனில், அன்னையை நியமத்துடன் பூஜை செய்கிறவர் அடையும் பாக்கியங்களை கூறவும் வேண்டுமோ!நவராத்திரி நான்காம் நாள், அம்பிகைக்கு பச்சை பட்டுடுத்தி, கூஷ்மாண்டா தேவியாகவும், மகாலட்சுமியாகவும் வழிபட வேண்டும். இவருக்கு மல்லிகை பூக்களால் அலங்கரித்து, கதம்ப சாதம் மற்றும் பச்சை பட்டாணியை நைவேத்தியம் செய்ய வேண்டும்.