உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கெடுபிடி வேண்டாம்; அடக்கியே வாசிப்போம் இடமாற்றத்தால் சுங்கத்துறை அதிகாரிகள் முடிவு

கெடுபிடி வேண்டாம்; அடக்கியே வாசிப்போம் இடமாற்றத்தால் சுங்கத்துறை அதிகாரிகள் முடிவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சுங்கத்துறை அதிகாரிகளை, மத்திய அரசு அதிரடியாக இடமாற்றம் செய்து வருவது, உயர் அதிகாரிகள் மட்டத்தில் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே, 'கெடுபிடி வேண்டாம்; கொஞ்சம் அடக்கியே வாசிப்போம்' என, அதிகாரிகள் முடிவெடுத்துள்ளனர். மத்திய நிதி அமைச்சக கட்டுப்பாட்டில், மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் செயல்படுகிறது. இதன் கீழ், சுங்கத்துறை உள்ளது. துறைமுகங்கள், விமான நிலையங்கள் என, சர்வதேச பயணியர் வந்து செல்லும் இடங்களில், சுங்கத்துறை அதிகாரிகள் பணியில் இருப்பர். சட்டவிரோதமாக கடத்தி வரப்படும் தங்கம், எலக்ட்ரானிக் பொருட்கள், போதைப்பொருட்கள் போன்றவற்றை பறிமுதல் செய்வர். இறக்குமதியாகும் பொருட்களுக்கு முறையாக வரி செலுத்தப்பட்டு உள்ளதா என்பதையும் கண்காணிப்பர். கடந்த மாதம், தமிழகத்தை தலைமையிடமாக வைத்து செயல்படும் நிறுவனம் ஒன்று, சென்னை விமான நிலைய கார்கோ பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள், 45 நாட்களாக லஞ்சம் கேட்டு, 'டார்ச்சர்' செய்வதால், தன் செயல்பாடுகளை இந்தியாவில் இருந்து நிறுத்துவதாக, சமூக வலைதளங்கள் வழியே அறிவித்தது. இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து, சுங்கத்துறையினர் மீது பலர் அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை முன்வைக்க துவங்கினர். சுங்கத்துறை அதிகாரிகளோ, 'அபாண்டமாக பழி சுமத்துகின்றனர்' என்று கூறி தட்டிக் கழித்து வந்தனர். ஆனால், இந்த புகார்களை டில்லியில் உள்ள சுங்க வாரியம், தனி அதிகாரிகளை நியமித்து விசாரித்தது. இந்நிலையில், கடந்த 12ம் தேதி சென்னை விமான நிலைய சுங்கப்பிரிவில் பணியாற்றி வந்த, முதன்மை கமிஷனர் தமிழ்வளவன், துணை கமிஷனர் ஹரேந்திர சிங் பால் ஆகியோர், அதிரடியாக டில்லிக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர். சுங்கத்துறையில் இடமாற்றம் பொதுவானதாக இருந்தாலும், சென்னை விமான நிலைய முதன்மை கமிஷனராக தமிழ்வளவன் பொறுப்பேற்று, ஆறு மாதங்கள் நிறைவடையாத நிலையில், இடமாற்றம் செய்யப்பட்டிருப்பது, சுங்கத்துறை வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இதைத் தொடர்ந்து மற்ற அதிகாரிகள், நாம் எதிலாவது சிக்கி விடுவோமோ என்ற அச்சத்தில் உறைந்து போயுள்ளனர். இதனால், தற்போதைக்கு கெடுபிடி வேண்டாம்; கொஞ்சம் அடக்கியே வாசிப்பது என்ற மனநிலையில் அதிகாரிகள் உள்ளனர். இது குறித்து, சுங்கத்துறை உயர் அதிகாரிகள் சிலர் கூறியதாவது: ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொழில் செய்யும் நிறுவனங்களுக்கு, வரி மற்றும், 'கிளியரன்ஸ்' தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் வெளிப்படையாக உள்ளன. அதற்கேற்ப அனுமதி அளித்து வருகிறோம். எனினும், சில குறிப்பிட்ட புகார்களால் பிரச்னை ஏற்படுகிறது. அதிலும், சில குற்றச்சாட்டுகள் போதிய ஆதாரங்கள் இல்லாமலேயே முன்வைக்கப்படுகின்றன. உள்ளுக்குள் நாங்கள் விசாரணை செய்யும் நேரத்திலேயே, அமைச்சகத்தில் இருந்து இடமாற்றம் வந்து விடுகிறது. இடமாற்றம் புதிதல்ல என்றாலும், உயர் அதிகாரிகளை உடனடியாக மாற்றம் செய்வது புதிராக இருக்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினர். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

jss
அக் 26, 2025 08:52

லஞ்சத்தை ஒழிக்க முடியாத. துணை முதல்வர் சநாதனத்தை டெங்கு மலேரியாவுக்கு ஒப்பீடு செய்தார் அதற்க்கு பதிலாக லஞ்சத்தை ஒப்பீடு செய்திருக்க வேண்டும்


நரேந்திர பாரதி
அக் 26, 2025 04:50

இவனுங்க அக்கப்போர் எல்லா விமான நிலையங்களிலும் தாங்க முடியல...கரித்துண்டு திருடுனவன புடிப்பானுங்க...என்ஜின் திருடனுங்கள விட்டுடுவானுங்க


SANKAR
அக் 26, 2025 05:43

Athenna padathula Mask? moonji theriyama maraikkavaa?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை