அரசு நடவடிக்கைகளுக்கு குந்தகம் விளைவிக்காதீங்க * பழனிசாமிக்கு சேகர்பாபு கண்டனம்
சென்னை:''வாய் சவடால் பேசும் பழனிசாமி, அரசின் நடவடிக்கைகளுக்கு குந்தகம் விளைவிக்காமல் இருந்தாலே போதும்,'' என, அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு கூறினார். அவர் அளித்த பேட்டி:வானிலை ஆய்வு மையம் மற்றும் தனியார் வானிலை ஆய்வாளர்களின் புயல் தொடர்பான கருத்துகளை உள்வாங்கி, முதல்வர் ஸ்டாலின், போர்க்கால அடிப்படையில் துரித நடவடிக்கை எடுத்தார். அதனால், கடந்த காலங்களில், சென்னையில் மழை பெய்தாலே, 3 நாட்கள் வரை ஸ்தம்பித்த நிலையில், தற்போது 13 செ.மீ., மழை பெய்த 12 மணி நேரத்திற்குள்ள சென்னை இயல்பு நிலைக்கு திரும்பியது.சாத்தனுார் அணையில் இருந்து முன்னறிவிப்பு கொடுத்து, படிப்படியாகத் தண்ணீர் வெளியேற்றப்பட்டது. முன்கூட்டியே தண்ணீர் திறக்கப்பட்டதால், பல உயிர்கள் காப்பாற்றப்பட்டன. பெருமழை, பெரும் சீற்றத்தின் போது ஆளும்கட்சிக்கு உதவியாக இல்லாவிட்டாலும், குறைகளைச் சுட்டிக்காட்டும் இடத்தில் உள்ள எதிர்கட்சிகள் வஞ்சக சூழ்ச்சியோடு அவதூறுகளை அள்ளி வீசிக் கொண்டுள்ளனர். எதிர்கட்சி தலைவர் பழனிசாமி அரசியலில், கள ஆய்வு கூட்டத்தைக்கூட நடத்த முடியாத இடத்தில் இருக்கின்றார். சேலத்திற்கும், சென்னைக்கும் மட்டுமே அரசியல் செய்யும் பழனிசாமி, 'சாத்தனுார் அணை முன்னறிவிப்பு இல்லாமல் திறக்கப்பட்டதால் தான் அதிக பாதிப்பு' என கூறியுள்ளார். அவருக்கு மனசாட்சி இருந்தால், உயிர் சேதம் இன்றி எடுத்த நடவடிக்கைக்காக, அரசுக்கு நன்றி தெரிவித்திருக்க வேண்டும். கடந்த காலத்தை அவர் திரும்பி பார்க்கவேண்டும். 2015ஆம் ஆண்டு செம்பரம்பாக்கம் ஏரியை முன்னறிவிப்பு இல்லாமல் திறந்த காரணத்தால் 250க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர் என்பதை மறக்க முடியாது. பல லட்சம் வீடுகளும் சேதம் அடைந்தன.வாய் சவடால் விடுகிற பழனிசாமிக்கு மனச்சாட்சி இருந்தால், வெள்ள நிவாரண தொகையை மத்திய அரசிடமிருந்து நிதியை கேட்டு பெற அழுத்தம் தர வேண்டும். தமிழக அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு குந்தகம் விளைவிக்காமல் இருக்க வேண்டும். பெஞ்சல் புயலின் தாக்கத்தை இந்திய வானிலை ஆய்வு மையமே கணிக்க திணறியது. அப்போதும் அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் அமைச்சர்களை ஒருங்கிணைத்து முதல்வர் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டார். வானிலை தரவுகளை மீறி புயலின் பாதிப்பு இருந்தது. அரசு தயார் நிலையில் இருந்த காரணத்தால்தான் உயிர் சேதம் பெருமளவில் தவிர்க்கப்பட்டது.விழுப்புரம் மாவட்டத்தில், வெள்ளம் வடிந்த பின்னர், நிவராண பணிகளை வழங்கவும், ஆறுதல் கூறவும் அமைச்சர் பொன்முடி நேரடியாக சென்றிருந்தார். அந்த இடத்தில், ஒரு கட்சியை சேர்ந்த மகளிரணி நிர்வாகி விஜயராணி என்பவரும், அவருடைய உறவினர் ராமர் என்பவரும், உள்நோக்கத்தோடு அமைச்சர் மீது சேற்றை வீசி இருக்கின்றனர். திருவண்ணாமலையில் பக்தர்களின் வருகைக்கு ஏற்ப அனைத்து வசதிகளும் செய்யப்படும். அங்கு, 40 லட்சத்திற்கு மேல் பக்தர்கள் கூடினாலும், வெற்றிகரமாக தீபத் திருவிழாவை நடத்துவோம். நிலச்சரிவு ஏற்படும் பகுதிகளை கண்டறிந்து, வருங்காலத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.