உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / உள்ளூர் பிரச்னையால் வேடந்தாங்கலுக்கு நீர்வரத்து பாதிப்பு: பறவைகள் வருகை குறைவு

உள்ளூர் பிரச்னையால் வேடந்தாங்கலுக்கு நீர்வரத்து பாதிப்பு: பறவைகள் வருகை குறைவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: இரண்டு கிராமங்களிடையே உள்ள உள்ளூர் பிரச்னை காரணமாக, வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்துக்கு, நீர்வரத்து தடுக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் தாலுகாவில், வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. இங்கு, 36 ஏக்கர் பரப்பளவில் உள்ள ஏரியை அடிப்படை ஆதாரமாக வைத்து, பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது.வரலாற்று பாரம்பரிய சிறப்பு மிக்க இந்த சரணாலயம், வனத்துறையால் பராமரிக்கப்பட்டு வருகிறது. ஆண்டு தோறும், அக்டோபர் முதல் மார்ச் வரை, இங்கு வெளிநாட்டு, வெளி மாநில பறவைகள் வரும்.குறிப்பாக, பல்வேறு நாடுகளில் இருந்து, 40 வகைகளை சேர்ந்த, 60,000 பறவைகள் இங்கு வந்து செல்வதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், சில ஆண்டுகளாக, இந்த ஏரிக்கு நீர்வரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால், பறவைகளின் எண்ணிக்கையும் வெகுவாக குறைந்துள்ளது.வீணாகும் நீர்குறிப்பாக, நீர்மட்டம் 16 அடிக்கு உயர்ந்து, சில மாதங்கள் நீடிக்கும்போது, நீர்க்கரம்பை மரங்களின் உச்சி கிளைகளில்தான், கூழைக்கடா பறவைகள் கூடுகட்டி குஞ்சு பொரிக்கும்.இங்கு நீர்மட்டம், 12 அடிக்கு உயராத நிலையில், கூழைக்கடா உள்ளிட்ட பறவைகள் வேறு இடங்களுக்கு செல்வதாக, பறவைகள் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.வளையபுத்துார் ஏரிக்கும், மதுராந்தகம் ஏரிக்கும் நடுவில், வேடந்தாங்கல் ஏரி அமைந்துள்ளது. வளையபுத்துார் ஏரியில் இருந்து, வேடந்தாங்கல் ஏரிக்கு தண்ணீர் வர வேண்டும்.இது தொடர்பாக வனத்துறையினர் கூறியதாவது:உத்திரமேரூர் மருதம் காப்புக்காட்டில் இருந்து வரும் தண்ணீர், நெல்வாய் ஏரி, வெள்ளப்புதுார் ஏரி, சித்துார் ஏரி, வளையபுத்துார் ஏரிகளுக்கு செல்ல கால்வாய் அமைந்துள்ளது.சில ஆண்டுகளுக்கு முன் வனத்துறை முயற்சியால், வெள்ளப்புதுார் முதல் வேடந்தாங்கல் வரையிலான, 18 கி.மீ., கால்வாய் துார்வாரப்பட்டது. இதனால், இந்த கால்வாய் அமைப்பில், தண்ணீர் செல்வதில் எந்த தடையும் இல்லை.இதில், வளையபுத்துார் ஏரியில் இருந்து, வேடந்தாங்கல் ஏரிக்கு வரும், 1.4 கி.மீ., கால்வாயும், துார்வாரி சுத்தம் செய்யப்பட்டது.இருப்பினும், வளையபுத்துார் ஏரியில் இருந்து உபரி நீரை வேடந்தாங்கலுக்கான கால்வாயில் திறந்து விடாமல், மதுராந்தகம் ஏரிக்கு செல்லும் கால்வாயில் மட்டும் திறக்கப்படுகிறது. பராமரிப்பு பணி காரணமாக, மதுராந்தகம் ஏரியில் நீர் இருப்பு வைக்கப்படுவதில்லை.ஆதங்கம்இதனால், வளையபுத்துார் ஏரியில் இருந்து, மதுராந்தகம் ஏரிக்கு செல்லும் நீர், வீணாக கடலுக்குதான் செல்கிறது. அதேநேரம், வேடந்தாங்கலுக்கு போதிய நீர் வரத்து இல்லாத சூழல் நிலவுகிறது.வனத்துறையினர், நீர்வளத்துறையினர் நடவடிக்கை எடுத்தாலும், வளையபுத்துார் கிராம மக்கள், வேடந்தாங்கலுக்கு நீர் செல்வதை தடுக்கின்றனர்.பறவைகள் சரணாலயம் காரணமாக, வேடந்தாங்கலுக்கு சுற்றுலா பயணியர் வருகை அதிகரிக்கிறது.இதனால், இந்த கிராம மக்களுக்கு வேலை வாய்ப்பு, வருவாய் கிடைக்கிறது. தண்ணீர் வழங்கும் எங்கள் கிராமத்துக்கு எந்த பயனும் கிடைக்கவில்லையே என்ற ஆதங்கத்தில், வளையபுத்துார் கிராம மக்கள் தண்ணீரை தடுக்கின்றனர்.இந்த விஷயத்தில், தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் தலையிட்டு, வளையபுத்துார் மக்களை சமாதானப்படுத்தி, வேடந்தாங்கலுக்கு இயல்பான முறையில் நீர்வரத்தை உறுதிப்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை