பவானி தொகுதி பிரச்னை குறித்து கேள்வி வேல்முருகனுக்கு துரைமுருகன் நோஸ்கட்
சென்னை: பவானி தொகுதி பிரச்னை குறித்து கேள்வி எழுப்பிய எம்.எல்.ஏ., வேல்முருகனுக்கு, அமைச்சர் துரைமுருகன் தடாலடியாக பதிலளித்து அதிரவைத்தார். சட்டசபையில் நடந்த விவாதம்: காங்., - முனிரத்தினம்: சோளிங்கர் தொகுதி கரிக்கல்லுக்கு, புலி வலம் மற்றும் கரிக்கல் ஏரிகளில் இருந்து இணைப்பு கால்வாய் அமைத்தால், 500 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசனம் பெறும். இங்குள்ள பல ஏரிகளுக்கு செல்லும் கால்வாய் பாழடைந்துள்ளதால், அவற்றை துார்வார வேண்டும். சோளிங்கர் நகராட்சியில் உள்ள ஏரி மதகில் அடைப்பு ஏற்பட்டு, பாசனத்திற்கு நீர் வரவில்லை. அதை சரிசெய்ய வேண்டும். அமைச்சர் துரைமுருகன்: இரண்டு ஏரிகளுக்கு மேல் பகுதியில் கரிக்கல் கிராமம் உள்ளது. எனவே, அங்கு தண்ணீர் கொண்டு செல்வது கடினம். நீரேற்று திட்டம் வாயிலாக, அதை செயல்படுத்த முடியும். அதற்கு அதிகம் செலவாகும். ஏரிகளை துார்வாருவதில் எந்த பிரச்னையும் இருக்காது. நடப்பாண்டு பணிகள் எடுத்துக் கொள்ளப்படும். சோளிங்கர் நகராட்சி ஏரி குறித்த கோரிக்கை கவனிக்கப்படும். த.வா.க., - வேல்முருகன்: காவிரி ஆற்றின் உபரி நீர், அந்தியூர், பவானி தொகுதியின் ஒரு பகுதியில் உள்ள மக்களுக்கு விவசாயம் செய்ய கிடைக்கவில்லை. இதுதொடர்பாக, விவசாயிகளுடன் சென்று, அமைச்சர் இல்லத்தில் சந்தித்து மனு கொடுத்துள்ளேன். சபாநாயகரிடம் கவன ஈர்ப்பு தீர்மானமும் கொடுத்துள்ளேன். அமைச்சர் துரைமுருகன்: அந்தியூர், பவானி தொகுதிகளின் குறைகள் கேட்க, அந்த தொகுதிகளில் எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். இவ்வாறு விவாதம் நடந்தது. துரைமுருகன் கூறிய பதிலால், அதிர்ச்சி அடைந்த வேல்முருகன் எதிர்ப்பு தெரிவித்தார். “நீங்கள் பேசுவது எதுவும் சபைக்குறிப்பில் ஏறாது,” என, சபாநாயகர் அப்பாவு கண்டித்து அமரவைத்தார்.