இளம்பெண் கொலை செய்து எரிப்பு முதியவருக்கு ஆயுள் தண்டனை
விழுப்புரம்: விழுப்புரம் அருகே இளம்பெண்ணை கொலை செய்து எரித்த வழக்கில் முதியவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. கடலுார் மாவட்டம், பண்ருட்டி அருகே ரெட்டிக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் தெய்வகண்ணு,54; இவருக்கும், பண்ருட்டி அருகே கரும்பூர் கிராமத்தை சேர்ந்த குப்புசாமி மனைவி வசந்தி,31; என்பவருக்கும் பழக்கம் இருந்துள்ளது. இந்நிலையில், வசந்தி வேறொருவடன் பழகி வந்ததாக கூறப்படுகிறது. இதையறிந்த தெய்வகண்ணு, வசந்தியை, 2024 மார்ச் 19 ம் தேதி, விழுப்புரம் அருகே காவணிப்பாக்கம் மலட்டாற்று அருகே அழைத்து சென்று, கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். பின், வசந்தியின் உடலை பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளார். இதுகுறித்து விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து தெய்வகண்ணுவை கைது செய்தனர். இவ்வழக்கு விசாரணை, விழுப்புரம் எஸ்.சி., எஸ்.டி., சிறப்பு கோர்ட்டில் நடந்து வந்தது. விசாரணை முடிந்த நிலையில், நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. குற்றம் சாற்றப்பட்ட தெய்வகண்ணுக்கு ஆயுள் தண்டனை, ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து, நீதிபதி பாக்கியஜோதி தீர்ப் பளித்தார்.