உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  இரு ஆண்டுகளில் 6,000 முறை ரயில் பாதையை கடந்த யானைகள்: ஏ.ஐ., உதவியால் விபத்துகள் தவிர்ப்பு

 இரு ஆண்டுகளில் 6,000 முறை ரயில் பாதையை கடந்த யானைகள்: ஏ.ஐ., உதவியால் விபத்துகள் தவிர்ப்பு

சென்னை: கோவை மாவட்டம் மதுக்கரை பகுதியில், கடந்த இரண்டு ஆண்டுகளில், 6,000 முறை யானைகள், விபத்தின்றி ரயில் பாதையை கடந்து சென்றதாக வனத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில், கோவை மாவட்டம் மதுக்கரையில், வனப்பகுதி வழியாக ரயில் பாதை அமைந்துள்ளது. இங்கு, ரயில்கள் மோதி யானைகள் இறக்கும் சம்பவங்கள் அதிகரித்து வந்தன. இது தொடர்பான வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ரயில்கள் மோதி யானைகள் இறப்பதை தடுக்க, புதிய வழிமுறைகளை கடைப்பிடிக்க, வனத்துறைக்கும், ரயில்வே துறைக்கும் உத்தரவிட்டது. அதன் அடிப்படையில், தமிழக வனத்துறை செயற்கை நுண்ணறிவு உதவியுடன் புதிய திட்டத்தை உருவாக்கியது. மதுக்கரையில் ரயில் பாதைக்கு வராமல் யானைகள் கடந்து செல்ல, இரண்டு இடங்களில் சுரங்க வழிகள் ஏற்படுத்தப் பட்டன. மேலும், 30க்கும் அதிகமான இடங்களில், செயற்கை நுண்ணறிவு முறையில் செயல்படும், 'தெர்மல் கேமராக்கள்' நிறுவப்பட்டன. இதில் பதிவாகும் காட்சிகள், கட்டுப்பாட்டு அறையில் கண்காணிக்கப்படும். அதன்படி, யானைகள் நடமாட்டம் குறித்து ரயில் ஓட்டுநர்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும். அப்பகுதியில் யானைகள் இருந்தால், அதற்கு ஏற்ப ரயில்கள் இயக்கப்படும். வனத்துறையின் இத்திட்டம் நல்ல பலனை அளித்துள்ளது. இப்பகுதியில் கடந்த இரண்டு ஆண்டுகளில், யானைகள் எவ்வித விபத்தும் இல்லாமல் 6,000 முறை கடந்து சென்றுள்ளன என, வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை செயலர் சுப்ரியா சாஹு தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட சமூக வலைதள பதிவில், 'ஒரு காலத்தில் யானைகள் இறப்பு அதிகமாக இருந்த இப்பகுதியில், தற்போது ஒரு யானை கூட இறக்கவில்லை என்ற நிலை வனத்துறையால் எட்டப்பட்டுள்ளது' என பெருமையுடன் குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி