| ADDED : பிப் 07, 2024 07:23 AM
மதுரை : ''வருவாய்த்துறையில் அலுவலக உதவியாளர் பணியிடங்கள் முழுவதையும் கிராம உதவியாளர்களுக்கே வழங்க வேண்டும்'' என தமிழ்நாடு கிராம உதவியாளர் முன்னேற்ற சங்கத்தினர் வலியுறுத்தினர்.தமிழக அரசின் வருவாய்த்துறையில் நுழைவு பணியிடம் கிராம உதவியாளர்களே. இவர்கள் மாநில அளவில் 16 ஆயிரத்து 630 பேர் உள்ளனர். பதவி உயர்வில் அலுவலக உதவியாளர்களாக மாறுவர். இப்பணியிடத்தில் 8 ம்வகுப்பு கல்வித் தகுதியில் உள்ள கிராம உதவியாளர்கள் 10 சதவீதம் பேரும், கருணை அடிப்படையில் 25 சதவீதம், நேரடி நியமனமாக 65 சதவீதத்தினரும் நியமிக்கப்படுவர். அதேசமயம் பத்தாம் வகுப்பு தகுதி பெற்றிருந்தால் 20 சதவீதம் பேர் வி.ஏ.ஓ.,க்களாக பதவி உயர்வு பெறுவர்.2023 செப்டம்பரில் அலுவலக உதவியாளர்கள் 564 பேரை நியமிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்காக பத்து சதவீதம் பேரை கிராம உதவியாளர்களில் இருந்து நியமிக்க வேண்டியுள்ளது. இவர்களில் கல்வித்தகுதி, 15 ஆண்டுகள் அனுபவம் உள்ளவர்கள் மட்டுமே 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உள்ளனர். எனவே முழுமையாக இப்பதவி உயர்வை தங்களுக்கே வழங்கப்பட வேண்டும் என அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.தமிழ்நாடு கிராம உதவியாளர் முன்னேற்ற சங்கத்தின் மாநில தலைவர் கணேஷ்வதி, செயலாளர் சந்தியா கூறியதாவது:வருவாய்த்துறையின் அடிப்படை, ஆதார பணிகளை செய்து அனுபவம் பெற்றுள்ளோம். இப்பணியில் இன்று பட்டம் பெற்றவர்களே பலர் உள்ளனர். இவர்களில் சரிபாதி பெண்கள். இப்பணியை இன்றைய நிலைக்கேற்ப தகவமைக்க வேண்டியுள்ளது.எனவே 1.1.2020 முதல் 31.12.2022 வரையான 564 அலுவலக உதவியாளர் காலியிடங்களை நிரப்பும்போது, வருவாய்த்துறையில் பணித்திறன் பெற்ற கிராம உதவியாளர்களை நியமித்தால் நிர்வாகத்திற்கு கூடுதல் வலு சேர்க்கும். எனவே இதற்கான உத்தரவை ரத்து செய்து, வருவாய்த்துறையில் உதவியாளர்களுக்கு துணைத்தாசில்தார் பதவி உயர்வு வழங்குவதைப் போல, கிராம உதவியாளர்களுக்கே முழுமையாக அலுவலக உதவியாளராக பதவி உயர்வு வழங்க வேண்டும். இதுகுறித்து அரசு செயலாளருக்கு மனு கொடுத்துள்ளோம் என்றனர்.