சென்னை : அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் அளித்த பேட்டி:டாஸ்மாக் கடையில் மதுபானம் வாங்குவோர், காலி பாட்டிலை திரும்ப கொடுத்தால், 10 ரூபாய் கொடுப்பர். திரும்ப கொடுக்கும் பாட்டில் சுத்தப்படுத்த கொண்டு செல்லப்படும்.தமிழகத்தில் ஆயிரக்கணக்கான துாய்மை பணியாளர்கள், காகிதம் எடுப்பவர்கள், பழைய பொருட்கள் வாங்குவோர், காயலாங்கடை வைத்திருப்போர், பாட்டில்களை எடுத்து விற்பர். அவர்கள் வாழ்வாதாரத்தை நசுக்கும் வகையில், காலி பாட்டில்களுக்கு அரசு டெண்டர் விடுகிறது. முதலில் கோவையில் டெண்டர் விட்டனர்.அதில், அரசுக்கு 3 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுகிறது எனக் கூறி, அங்குள்ளவர்கள் நீதிமன்றம் சென்றனர். அங்கு வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், காலி பாட்டில்களை டாஸ்மாக் வாங்கும் என, அனைத்து மாவட்டங்களிலும் டெண்டர் விட்டனர். டெண்டர் தேதி முடிந்து, 'டெக்னிக்கல்' டெண்டரை திறந்தவர்கள், நிதி டெண்டரை திறக்கவில்லை. இது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. ஏனெனில், கட்சிக்காரர்களை அழைத்து, 180 மி.லி., காலி பாட்டில் 35 பைசா; 375 மி.லி., காலி பாட்டில் 65 பைசா; 700 மி.லி., பாட்டில் ஒரு ரூபாய் 12 பைசா; ஒரு லிட்டர் பாட்டில், ஒரு ரூபாய் 20 பைசா; 650 மி.லி., பாட்டில் ஒரு ரூபாய் 10 பைசா; 500 மி.லி., பாட்டில் 65 பைசா என, விலை குறிப்பிடும்படி கூறியுள்ளனர். அவர்களும் அந்த விலையை குறிப்பிட்டு, டெண்டர் போட்டுஉள்ளனர். அதேநேரம் போட்டியாளர்கள் 180 மி.லி., பாட்டில் 50 பைசா; 375 மி.லி., பாட்டில் 1 ரூபாய்; 700 மி.லி., பாட்டில் 5 ரூபாய்; 1 லிட்டர் பாட்டில் 50 ரூபாய்; 650 மி.லி., பாட்டில் 2 ரூபாய்; 500 மி.லி., பாட்டிலுக்கு 1 ரூபாய் டாஸ்மாக்கிற்கு தருவதாகக் கூறியுள்ளனர். விதிமுறைகளின்படி அதிகமாக பணம் குறிப்பிட்டுள்ளவர்களுக்கு ஒப்பந்தத்தை வழங்க வேண்டும்.எனவே, அவர்கள் நிதி டெண்டரை திறக்கவில்லை. மிரட்டல், உருட்டல் ஒரு பக்கம் நடக்கிறது. வேண்டிய ஆளுக்கு கொடுத்து, மாதம் 50 கோடி ரூபாய் எடுக்க பார்க்கின்றனர். அந்த பணம் ஏழை மக்கள் பிழைக்க உதவியது. அதில் மண்ணை போட்டு, எச்சில் பாட்டிலில் காசு பார்க்கும் கட்சியாக தி.மு.க., உள்ளது.இவ்வாறு ஜெயகுமார் கூறினார்.