உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரூ.1609 கோடி பெரியாறு கூட்டுக்குடிநீர் திட்டம் முதல்வர் ஸ்டாலின் திறப்பதில் காத்திருக்கு சிக்கல் களநிலவரத்தால் பொறியாளர்கள் அதிர்ச்சி

ரூ.1609 கோடி பெரியாறு கூட்டுக்குடிநீர் திட்டம் முதல்வர் ஸ்டாலின் திறப்பதில் காத்திருக்கு சிக்கல் களநிலவரத்தால் பொறியாளர்கள் அதிர்ச்சி

மதுரை: மதுரை மக்களுக்கு ரூ.1609.69 கோடி முல்லை பெரியாறு கூட்டுக்குடிநீர் திட்டத்தை அடுத்தமாதம் முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைக்கவுள்ள நிலையில், ஒப்பந்த நிறுவனங்கள் செயல்பாடுகளால் நுாறு சதவீதம் பணிகளை அதற்குள் முடிப்பதில் சவால்கள் உள்ளதாக பொறியாளர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். மாநகராட்சி 100 வார்டுகளில் வசிக்கும் மக்களுக்கு தற்போது தற்போது வழங்கப்படும் குடிநீர் போதுமானதாக இல்லாததால் கூடுதலாக குடிநீர் வழங்க அ.தி.மு.க.,ஆட்சியில் இரண்டாவது முல்லை பெரியாறு கூட்டுக்குடிநீர் திட்டம் கொண்டுவரப்பட்டது. தற்போது திட்ட மதிப்பீடு ரூ.1609.69 கோடியாக அதிகரிக்கப்பட்டது. தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின் சட்டசபையில் முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜூ, 'அ.தி.மு.க., ஆட்சியில் இத்திட்டம் கொண்டுவரப்பட்டு 60 சதவீதம் பணிகள் முடிக்கப்பட்டது. தி.மு.க., ஆட்சியில் எப்போது இத்திட்டம் மக்கள் பயன்பாட்டுக்கு வரும்' என கேள்வி எழுப்பினார். அதற்கு அமைச்சர் நேரு, '2023 டிசம்பரில் செயல்பாட்டுக்கு வரும்' என பதில் அளித்தார். இரண்டாண்டுகளாகியும் தற்போது வரை செயல்பாட்டிற்கு வந்தபாடில்லை. இந்நிலையில் 5வது கட்டப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு, வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டு வினியோகம் தொடர்பான சோதனை ஓட்டம் குறிப்பிட்ட வார்டுகளில் தொடர்ந்து நடக்கிறது. இதனால் டிசம்பர் 2வது வாரத்தில் முதல்வர் இத்திட்டத்தை மதுரையில் துவக்கி வைக்க உள்ளதாகவும், அதற்கான பணிகளை முடிக்க அதிகாரிகள் முடுக்கிவிட்டுள்ளதாகவும் தெரிகிறது. ஆனால் ஒப்பந்த நிறுவனங்கள் செயல்பாடால் டிசம்பர் 2வது வாரத்தில் நுாறு சதவீதம் பணி நிறைவடைவது பெரும் சவாலாக இருக்கும் என பொறியாளர்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனர். இதுகுறித்து சீனியர் பொறியாளர்கள் கூறியதாவது: இத்திட்டம் 5 கட்டங்களாக நடந்தது. 4, 5வது கட்டங்களில் வீடுகளுக்கு குழாய்கள் இணைப்பு வழங்கி, சீராக குடிநீர் வழங்கும் பணிகளை இரண்டு தனியார் நிறுவனங்கள் மேற்கொள்கின்றன. தற்போது குடிநீர் வினியோக சோதனை ஓட்டம் என்ற பெயரில் நடக்கும் பணிகள் சம்பந்தப்பட்ட வார்டுகளின் ஏ.இ.,க்கள், கவுன்சிலர்களுக்கு தெரிவதில்லை. இத்திட்டத்தில் பழைய 44, புதிய 38 மேல்நிலைத் தொட்டிகளுக்கு குடிநீர் ஏற்றப்பட்டு, அங்கிருந்து வீடுகளுக்கு குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. இதற்காக ஒரு மேல்நிலை தொட்டியில் இருந்து நான்கு பிரிவுகளாக நீர் வினியோக வரைமுறை (டி.எம்.ஏ.,) நிர்ணயம் செய்யப் பட்டுள்ளது. ஒவ்வொரு பிரிவிலும் 800 முதல் 1500 வீடுகளுக்கான குழாய் இணைப்புகள் உள்ளன. உண்மை நிலவரம் மறைக்கப்படுகிறதா குடிநீர் பகிர்மான குழாய்களை குறைந்தது 3 அடி ஆழத்திலும், வீடுகளுக்கான இணைப்பு குழாய்களை 2 அடி ஆழத்திலும் பதிக்க வேண்டும். அப்போது தான் கடைசி வீடு வரை உள்ள இணைப்புக்கு சீரான குடிநீர் செல்லும். ஆனால் பல இடங்களில் 2 இன்ச், 3 இன்ச் ஆழத்தில் இக்குழாய்கள் பதித்து கொண்டு செல்லப்பட்டுள்ளதாக சர்ச்சை எழுந்தள்ளது. ஏற்ற இறக்க குழாய்ப் பதிப்புகளால் குழாய் உடைப்பு பிரச்னைகளும், கடைசி இணைப்பு வரை குடிநீர் செல்லாத பிரச்னையும் எழுகின்றன. இதை மறைக்க இத்திட்டத்தில் விதிமீறி டி.எம்.ஏ.,க்களில் வால்வுகள் ஏற்பாடு செய்து 'சப் டிவிஷன்'கள் செய்யப்படுகின்றன. இதனாலும் சில இடங்களில் அழுத்தம் தாங்காமல் குடிநீர் கசிவு ஏற்படுகிறது. அதை சரி செய்கிறேன் என்ற பெயரில் தார் ரோடுகளையும் ஒப்பந்த நிறுவனங்கள் தோண்டிப்போட்டு சரிவர மூடாமல் விட்டுச் செல்கின்றன. இதை சமாளிப்பது வார்டு பொறியாளர்களுக்கு பெரும் சவாலாக உள்ளது. களநிலவரம் இவ்வாறு இருக்க, இதுகுறித்து மாநகராட்சி உயர் அதிகாரிகளுக்கு சரியான தகவல்கள் தெரிவிக்கப்படுவதில்லை. இந்நிலையில் முதல்வர் அடுத்த மாதம் திட்டத்தை துவக்க உள்ளார். அதற்குள் குறைபாடுகளை ஆய்வு செய்து, ஒப்பந்த நிறுவனங்களிடம் கண்டிப்பு காண்பித்து மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் முதல்வர் திறப்புக்கு பின்பும் இத்திட்டம் அரசியல் ரீதியான விமர்சனத்திற்கு உள்ளாகும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை