இ.பி.எஸ்., குற்றச்சாட்டை மதிப்பதில்லை ஸ்டாலின் விமர்சனத்தால் தொடரும் சர்ச்சை
'எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி குற்றச்சாட்டை நாங்கள் மதிப்பதில்லை' என, முதல்வர் ஸ்டாலின் கூறியதற்கு, பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.தமிழக முதல்வர் ஸ்டாலின்: சென்னையில் மழை நீர் தேங்கியிருப்பதாகக் கூறுவது தவறான செய்தி; மழைநீர் தேங்கவில்லை. மழை நிவாரண பணிகள் திருப்தியாக உள்ளன; மக்களும் திருப்தியாக உள்ளனர். சென்னையில் மழை பெய்யும் போது, சில இடங்களில் தண்ணீர் தேங்கும்; மழை நின்றதும் வடிந்து விடும். தலைநகரம் சென்னை தப்பித்தது. அதனால், தத்தளித்தது என்று கூற முடியாது; தலைநகரம் நிம்மதியாக இருக்கிறது. நல்லது, கெட்டது எல்லாவற்றுக்கும் நாங்கள் மக்களோடு உள்ளோம். வானிலை ஆய்வு மையம் ஓரளவுக்கு தான் மழை, புயல் உள்ளிட்ட இயற்கை சீற்றங்களை முன்கூட்டியே கணிக்க முடியும்; முழுமையாக கணிக்க முடியாது. வானிலை நிலவரமே திடீர் திடீரென மாறுகிறது. இருந்த போதும், வானிலை ஆய்வாளர்கள், அதிகாரிகள் கூறுவதை ஏற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தோம். தமிழக எதிர்க்கட்சித் தலைவரை பொறுத்தவரை, அவருக்கு குற்றச்சாட்டு வைப்பதே வேலையாகி விட்டது; அதை நாங்கள் மதிப்பதில்லை; அது குறித்து கவலைப்படுவதும் இல்லை. எங்கள் வேலையை நாங்கள் தொடர்ந்து செய்கிறோம்.எங்களுக்கு ஓட்டு போட்டவர்களுக்கு மட்டுமின்றி, ஓட்டு போடாதவர்களுக்கும் சேர்த்து பணியாற்றி வருகிறோம். அது தான் எங்கள் குறிக்கோள். பழனிசாமி பதில் சொல்ல வேண்டிய தேவையும், அவசியமும் இல்லை. அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கொலை, கொள்ளை போன்ற சட்டம் - ஒழுங்கு சீர்கேடுகளால், மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது. போதைப்பொருள் புழக்கம் தலைவிரித்தாடுகிறது. அது மட்டுமின்றி, ஆசிரியர்கள், மருத்துவர்கள், நெசவாளர்கள், போக்குவரத்து ஊழியர்கள், தொழில் துறையினர் என, அனைத்து தரப்பினரும் தெருவில் இறங்கி போராடும் சூழலே உள்ளது.குற்றச்சாட்டு வைப்பதே எனக்கு வேலையாக போய் விட்டது என ஸ்டாலின் கூறுகிறார். தி.மு.க., ஆட்சியின் அவல நிலையை சுட்டிக்காட்ட வேண்டியது, எதிர்க்கட்சித் தலைவர் என்ற வகையில் என் கடமை. அதற்கு முறையான நடவடிக்கை எடுத்து செயல்படுத்துவது அரசின் கடமை. அதை செய்யாத, எந்த திறமையும் இல்லாத ஒரு முதல்வரிடம், இப்படிப்பட்ட மடை மாற்றும் பதிலைத்தான் எதிர்பார்க்க முடியும்.தி.மு.க.,விடம் நாகரிகத்தையோ, மக்கள் மீதான அக்கறையையோ எதிர்பார்க்க முடியாது. முதல்வரின் சமீபத்திய தரக்குறைவான பேச்சுகளே, அதற்கான மிகப்பெரிய சான்று. நிர்வாகத் திறனற்ற முதல்வர், முடிந்தால் மக்கள் பணி செய்யுங்கள்; இல்லையேல், நிர்வாகத் திறனில்லை என்று ஒப்புக் கொள்ளுங்கள். ஆட்சி இருக்கிறது என்ற ஆணவச் செருக்கில் முதல்வர் பேசும் திமிர் பேச்சுக்கு, மக்கள் தக்க பாடம் புகட்டுவர்.சென்னை, டிச. 2-