சேலம்: ''தமிழகத்தில் 5.75 லட்சம் அரசு பணியிடங்கள் காலியாக உள்ளன. அவற்றை தி.மு.க., அரசு நிரப்பவில்லை,'' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி தெரிவித்தார். சேலம் மாவட்டம் ஓமலுாரில், அ.தி.மு.க., 54ம் ஆண்டு விழா பொதுக்கூட்டம், நேற்று முன்தினம் நடந்தது. இதில், கட்சியின் பொதுச்செயலர் பழனிசாமி பங்கேற்று பேசினார். அப்போது, அவர் கூறியதாவது: இந்தியாவிலேயே ஊழல் நிறைந்த மாநிலம் தமிழகம் என்ற கேவல நிலையை ஏற்படுத்தி உள்ளனர். மக்களை பற்றி சிந்திக்காமல், குடும்பத்தை பற்றியே சிந்திக்கின்றனர். தமிழகத்தில் நடக்கும் குடும்ப ஆட்சியில், நான்கு முதல்வர்கள். ஸ்டாலின், உதயநிதி, ஸ்டாலின் மனைவி துர்கா, மருமகன் சபரீசன் என நான்கு அதிகார மையங்கள், மக்களை ஆட்டிப்படைக்கின்றன. அதனால் தான் லஞ்ச லாவண்யம் மலிந்து விட்டது. மதுரை மாநகராட்சியில், 700 கோடி ரூபாய் ஊழல் செய்து, தி.மு.க., மேயரை துாக்கினர். இன்று வரை புதிய மேயரை நியமிக்க முடியவில்லை. பங்கு பிரிப்பதில் இன்று வரை போராட்டம் நடக்கிறது. அதனால், மேயர் தேர்தல் நடத்த முடியவில்லை. திண்டுக்கல், காஞ்சிபுரம், கோவை, திருநெல்வேலி என எல்லா மாநகராட்சியிலும் ஊழல் பணத்தை பங்கு பிரிப்பதில் பிரச்னை. தி.மு.க., ஆட்சியில் பெண்கள், சிறுமியர், மூதாட்டிகளுக்கு கூட பாதுகாப்பு இல்லை. நான் தவறான கருத்தை பரப்பு வ தாக, தி.மு.க.,வின் ஆர்.எஸ்.பாரதி கூறுகிறார். அவருக்கு வயது முதிர்ந்து விட்டது; புத்தி சரியாக இல்லை. தி.மு.க., ஆட்சியில், எவ்வளவு பாலியல் வன்கொடுமை நடந்துள்ளது என்பதை, தி.மு.க., அமைச்சரே துாத்துக்குடியில் பேசியுள்ளார். தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் போதைப்பொருட்கள். தன் கையில் போலீஸ் துறையை வைத்துக்கொண்டு, அதை தடுக்க திராணியற்ற முதல்வராக ஸ்டாலின் உள்ளார். டி.ஜி.பி., ஒருவர் கஞ்சாவை ஒழிக்க, 2.O, 3.O, 4.O என, 'ஓ' போட்டார். இப்போது பொறுப்பு டி.ஜி.பி., தான் இருக்கிறார். ஒரு டி.ஜி.பி.,யை கூட நியமிக்க முடியாத கேவலமான அரசு, இது. கடந்த நான்கரை ஆண்டுகளில் 75,000 அரசு பணியாளர்கள் ஓய்வு பெற்றுள்ளனர். தற்போது, 5.75 லட்சம் அரசு பணியிடங்கள் காலியாக உள்ளன. புதிதாக ஆட்களை நியமிக்கவில்லை. பழைய ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்றுவதாக, அரசு ஊழியர்களையும் தி.மு.க.,வினர் ஏமாற்றி விட்டனர். அ.தி.மு.க., மட்டுமே, அரசு ஊழியர்களுக்கு பாதுகாப்பாக இருக்கும். இவ்வாறு அவர் பேசினார்.