| ADDED : பிப் 10, 2024 06:26 AM
விழுப்புரம்: முன்னாள் டி.ஜி.பி., மீதான பாலியல் வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பின் மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு வரும் 12ம் தேதி வழங்கப்பட உள்ளது. பெண் ஐ.பி.எஸ்., அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு அளித்த புகாரை விசாரித்த விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றம், வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் டி.ஜி.பி., ராஜேஷ்தாசுக்கு 3 ஆண்டு சிறை, புகார் கொடுக்க சென்ற பெண் அதிகாரியை தடுத்த, செங்கல்பட்டு முன்னாள் எஸ்.பி., கண்ணனுக்கு ரூ.500 அபராதம் விதித்து கடந்த மே மாதம் தீர்ப்பு வழங்கப்பட்டது.இதனை எதிர்த்து இருவரும், விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்நிலையில் வழக்கை வேறு மாவட்ட கோர்ட்டுக்கு மாற்றக்கோரி ராஜேஷ்தாஸ் தாக்கல் செய்த மனு, சென்னை ஐகோர்ட் மற்றும் சுப்ரீம் கோர்ட்டிலும் தள்ளுபடியானது. மேலும், வழக்கை விழுப்புரம் மாவட்ட நீதிமன்றமே விசாரிக்க உத்தரவிட்டது. நீதிபதி எச்சரிக்கையை தொடர்ந்து கடந்த 1ம் தேதி முதல் ராஜேஸ்தாஸ் கோர்ட்டில் நேரில் ஆஜராகி, தனது வாதத்தை 4 நாள் பதிவு செய்தார்.வாதங்களை பதிவு செய்த மாவட்ட நீதிபதி பூர்ணிமா, 9ம் தேதி அரசு தரப்பு வாதிட உத்தரவிட்டார். நேற்று வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, ராஜேஷ்தாஸ் தரப்பு வழக்கறிஞர் ஆதிசங்கரன் ஆஜராகி, தங்கள் தரப்பு வாதத்தை முன்வைக்க மேலும் அவகாசம் கோரினார்.அதற்கு மறுத்த நீதிபதி, ஏற்கனவே 5 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. மீண்டும் அவகாசம் வழங்க முடியாது. இனி அரசு தரப்பில், பதில் வாதத்தை முன்வைக்க கூறினார். அதனைத் தொடர்ந்து, அரசு வழக்கறிஞர்கள் வைத்தியநாதன், கலா ஆகியோர் ஆஜராகி, பதில் வாதத்தை முன்வைத்தனர்.அதனை பதிவு செய்த நீதிபதி பூர்ணிமா, இந்த மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பு வரும் 12ம் தேதி வழங்கப்படும் என்று உத்தரவிட்டார்.