உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வீட்டில் பட்டாசு தயாரித்த போது வெடி விபத்து: மூன்று பேர் பலி

வீட்டில் பட்டாசு தயாரித்த போது வெடி விபத்து: மூன்று பேர் பலி

சாத்துார்:விஜயகரிசல்குளத்தில் சட்டவிரோதமாக வீட்டில் பட்டாசு தயாரித்த போது, மின் கசிவால் வெடி விபத்து ஏற்பட்டு, மூன்று பேர் உடல் கருகி பலியாகினர். விருதுநகர் மாவட்டம், சாத்துார் அருகே விஜயகரிசல்குளத்தைச் சேர்ந்தவர் பொன்பாண்டி, 44. இவர்,தன் வீட்டில், அரசு அனுமதியின்றி சட்டவிரோதமாக ஆட்களை வேலைக்கு அமர்த்தி, சோல்சா சரவெடி உற்பத்தி செய்து வந்தார். வெடித்து சிதறியது நேற்று காலை 11:00 மணிக்கு, தொழிலாளர்கள் வீட்டில் பட்டாசு தயாரித்து கொண்டிருந்த போது, வெளியே உள்ள, 'மெயின் சுவிட்ச்' மீது கோழி பறந்து வந்து மோதியது. இதனால், மெயின் சுவிட்சில் இருந்து தீப் பொறி ஏற்பட்டு, 'ஸ்டாக்'கில் இருந்த சோல்சா சரவெடி மீது பட்டு வெடித்தது. இதில், வீடு முழுதும் வெடித்து சிதறியது. அப்போது, வேலை செய்து கொண்டிருந்த கீழக்கோதைநாச்சியார்புரத்தைச் சேர்ந்த ஜெகதீஷ், 19, விஜயகரிசல்குளம் முத்து லட்சுமி, 70, சண்முகத்தாய், 55, ஆகியோர் தீயில் சிக்கி, உடல் கருகி பலியாகினர். மாரியம்மாள் காயமடைந்து சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பொன்பாண்டி தலை மறைவாக உள்ளார். வெம்பக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர். சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்ட எஸ்.பி., கண்ணன், ''சட்டவிரோதமாக வீட்டில் பட்டாசு தயாரிக்கக் கூடாது; இனி நானே நேரில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பேன்,'' என, அப்பகுதி மக்களிடம் கூறினார் . இதற்கிடையே, பட்டாசு விபத்தில் உயிரிழந்த மூவரின் குடும்பத்திற்கு, முதல்வர் பொது நிவாரண நிதியிலிருந்து தலா, 4 லட்சம் ரூபாய், காயமடைந்தவருக்கு 1 லட்சம் ரூபாய் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !