உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வடகாட்டில் கோஷ்டி மோதல்; 10 பேர் படுகாயம்; குடிசைகளுக்கு தீ வைப்பு

வடகாட்டில் கோஷ்டி மோதல்; 10 பேர் படுகாயம்; குடிசைகளுக்கு தீ வைப்பு

புதுக்கோட்டை: ஆலங்குடி அருகே வடகாட்டில் இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் 10 பேர் காயம் அடைந்தனர்.புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே வடகாட்டில் அரசு புறம்போக்கு இடத்தில் உள்ள கோவில் மற்றும் விளையாட்டு திடல் தொடர்பாக இரு சமூகத்தினர் இடையே ஏற்கனவே முன்விரோத பிரச்னை ஏற்பட்டது. தொடர்ந்து, அவ்வப்போது ஆலங்குடி தாலுகா அலுவலகத்தில் சமாதான கூட்டம் நடைபெற்று வந்தது. இந்நிலையில், நேற்று வடகாடு முத்துமாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெற்றது. அப்பகுதியில் உள்ள இரு சமூக இளைஞர்கள் இடையே ஏற்கனவே ஏற்பட்ட பிரச்னை தொடர்பாக மீண்டும் பிரச்னை ஏற்பட்டது. ஒரு சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் மற்றொரு தரப்பைச் சேர்ந்த குடிசை வீடுகளுக்கு தீ வைத்ததாக தெரிகிறது. இதேபோல், மற்றொரு தரப்பைச் சேர்ந்த இளைஞர்கள் அப்பகுதியில் சாலைகளில் வந்தோர் போகும் நபர்களை தாக்கியுள்ளனர். இதில், 10க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இவர்கள் வடகாடு, ஆலங்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் அப்பகுதியில் அரசு பஸ்சின் கண்ணாடியை உடைத்துள்ளனர். அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த புதுக்கோட்டை எஸ்.பி., அபிஷேக் குப்தா தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ