உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நெல் கொள்முதலில் முறைகேடு விவசாய சங்கம் போராட்டம் அறிவிப்பு

நெல் கொள்முதலில் முறைகேடு விவசாய சங்கம் போராட்டம் அறிவிப்பு

சென்னை:“நெல் கொள்முதல் முறைகேடை கண்டித்து, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக இயக்குநர் அலுவலகத்தை 27ம் தேதி முற்றுகையிட்டு, போராட்டம் நடத்த உள்ளோம்,” என, தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்தார்.சென்னையில் அவர் அளித்த பேட்டி:டெல்டா மாவட்டத்தில், முதன் முதலாக நெல் கொள்முதல் துவக்கப்பட்டது. பின்னர் தமிழகம் முழுதும் பரவலாக்கப்பட்டது. இதனால், விவசாயிகளுக்கு உரிய விலை, சந்தை உத்தரவாதம் கிடைத்தது. நடப்பாண்டு மத்திய அரசின் பதிவு பெற்ற தனியார் நிறுவனத்திற்கு, நெல் கொள்முதல் செய்ய, தமிழக அரசு அனுமதி வழங்கியது.அந்நிறுவனம், நெல் கொள்முதல் செய்ய 170 கோடி ரூபாயை, தமிழக நுகர்பொருள் வாணிப கழகம் முன்பணமாக வழங்கியது. கொள்முதல் செய்த நெல்லுக்கான தொகை, விவசாயிகளுக்கு வழங்கப்படவில்லை. அரசுக்கு அரிசி வழங்கப்படவில்லை. செலவிட்ட தொகை விபரம் வழங்கவில்லை எனக் கூறி, தனியாருக்கு வழங்கப்பட்ட நெல் கொள்முதல் அனுமதியை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிக கழக இயக்குநர் ரத்து செய்துள்ளார்.இதனால், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட எட்டு மாவட்டங்களில், கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்கு, 500 கோடி ரூபாய் வழங்க வேண்டியுள்ளது. இதில், மிகப்பெரிய முறைகேடு நடந்துள்ளது. தனிநபருக்கு ஆதரவாக அனுமதி வழங்கிய, அமைச்சர் சக்கரபாணி, இந்த முறைகேடுக்கு பொறுப்பேற்று பதவி விலக வேண்டும். விவசாயிகளுக்கு உடனடியாக கொள்முதல் பணத்தை பெற்று தர, முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை வலியுறுத்தி, சென்னை கோயம்பேடில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக இயக்குநர் அலுவலகத்தை, 27ம் தேதி முற்றுகையிட்டு போராட்டம் நடத்த உள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ