உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கே.என்.எம்.,-1638 ரக நெல் கொள்முதல் நிறுத்தம்; வாணிப கழக முடிவால் விவசாயிகள் அதிர்ச்சி

கே.என்.எம்.,-1638 ரக நெல் கொள்முதல் நிறுத்தம்; வாணிப கழக முடிவால் விவசாயிகள் அதிர்ச்சி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை:தமிழகத்தில் பயிரிடப்பட்டுள்ள, 'கே.என்.எம்., - 1638' ரக நெல்லை கொள்முதல் செய்ய, வாணிப கழகம் மறுத்து வருவதால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் மட்டுமின்றி, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலுார், திருநெல்வேலி உள்ளிட்ட பல மாவட்டங்களிலும், நெல் சாகுபடி அதிகளவில் நடந்து வருகிறது.

நெல் மூட்டைகள் தேக்கம்

இங்கு விவசாயிகள் உற்பத்தி செய்யும் நெல், அரசின் உணவு தானிய திட்டத்திற்காக, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் வாயிலாக கொள்முதல் செய்யப்படுகிறது. நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு சொந்தமான அரிசி ஆலைகள் மட்டுமின்றி, தனியார் ஆலைகளுக்கும் இந்த நெல் அனுப்பப்பட்டு, அரிசியாக மாற்றப்பட்டு கிடங்குகளில் சேமிக்கப்படுகிறது.தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும், கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் நெல் கொள்முதல் நடந்து வருகிறது.திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை உள்ளிட்ட பல மாவட்டங்களில், கே.என்.எம்., - 1638 என்ற நெல் ரகம் விவசாயிகளால் நடப்பாண்டு அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. குறுகியகால பயிராக, 90 நாட்களில் விளையும் இந்த ரகம் வாயிலாக, விவசாயிகளுக்கு அதிக மகசூல் கிடைத்துள்ளது.உற்பத்தி செய்யப்பட்ட நெல்லை, அரசு கொள்முதல் நிலையங்களுக்கு விவசாயிகள் எடுத்து சென்று வருகின்றனர். ஆனால், அரிசி உற்பத்தி குறைவாக கிடைப்பதாக கூறி, இந்த ரக நெல்லை கொள்முதல் செய்ய முடியாது என, விவசாயிகளை திருப்பி அனுப்பி வருகின்றனர். இதனால், திருவள்ளூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில், நெல் கொள்முதல் நிலையங்களுக்கு வெளியேயும், உலர்களங்களிலும், பல டன் நெல் மூட்டைகள் தேங்கி கிடக்கின்றன.

இதுகுறித்து, திருவள்ளூர் மாவட்ட விவசாயிகள் சங்கத்தின் தலைவர் ஜே.ஆஞ்சநேயலு கூறியதாவது:

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்துடன், ஒப்பந்தம் செய்துள்ள தனியார் அரிசி ஆலைகளில், இந்த நெல்லை அரவை செய்து அரிசியாக்கி தருவதற்கு மறுக்கின்றனர். அதை காரணமாகக் கூறி, கொள்முதலை வாணிப கழக அதிகாரிகள் நிறுத்தி வைத்துள்ளனர்.

கண்டுக்கொள்ளவில்லை

சமீப நாட்களாக, திடீரென்று மழை கொட்டுவதால், அறுவடை செய்த நெல்லை பாதுகாக்க முடியாமல், விவசாயிகள் திணறி வருகின்றனர். இதனால், 100 கிலோ நெல்லை, 1,000 முதல் 1,300 ரூபாய் வரை தனியாரிடம் விற்கும் நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளனர். சாகுபடி துவங்கும் போதே வேளாண் துறை அதிகாரிகள் கூறியிருந்தால், அந்த ரகத்தை விவசாயிகள் சாகுபடி செய்திருக்க மாட்டார்கள். தனியார் கடைகளில், இந்த ரக நெல் விதைகளும் தாராளமாக விற்பனை செய்யப்படுகின்றன. அதையும் அதிகாரிகள் கண்டுக்கொள்ளவில்லை. நுகர்பொருள் வாணிப கழக முடிவால், விவசாயிகளுக்கு பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்னைக்கு முதல்வர் ஸ்டாலினும், உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணியும் விரைந்து தீர்வு காண வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

கொள்முதல் செய்ய மறுப்பது ஏன்?

வேளாண் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களுக்கு மட்டுமே, இந்த ரக நெல்லை சாகுபடி செய்ய மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது. விதை கிடைப்பதால், அதை தமிழக விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர். அதற்கேற்ப மகசூலும் கிடைத்துள்ளது. நெல்லை பொறுத்தவரை, 100 கிலோ அரவை செய்தால் அதில் 65 கிலோ அரிசி கிடைக்க வேண்டும். அதை, வாணிப கழகத்திற்கு அரிசி ஆலைகள் ஒப்படைக்க வேண்டும். கே.என்.எம்., - 1638 ரக நெல்லை அரவை செய்தால், 45 முதல் 50 கிலோ அரிசி மட்டுமே கிடைக்கிறது. எனவே, நஷ்டத்தை தவிர்க்க, அரவை செய்வதற்கு தனியார் அரிசி ஆலைகள் மறுக்கின்றன. இதுவே பிரச்னைக்கு காரணம். அரசுதான் இதற்கு தீர்வு காண வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ