சென்னை:''குஜராத் முதல்வராக மோடி பேசிய போது, 30.50 சதவீதமாக இருந்த நிதி பங்கீடு, அவர் பிரதமரான பின், 42 சதவீதமாக உயர்ந்துள்ளது,'' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். தமிழக பா.ஜ., செய்தி தொடர்பாளர் ஸ்ரீகாந்த் கருணேஷின் தந்தையும், பன்மொழி அறிஞருமான மறைந்த த.சி.க.கண்ணன் உருவப்பட திறப்பு விழா நேற்று நடந்தது. கண்ணனின் உருவப்படத்தை அண்ணாமலை திறந்து வைத்தார். பின், அண்ணாமலை அளித்த பேட்டி:குஜராத் முதல்வராக மோடி இருந்தபோது, 2001ல் மாநிலங்களுக்கான நிதி பங்கீடு, 30.50 சதவீதம் தான். இதை மோடி கடுமை யாக எதிர்த்து, மாநிலங்களுக்கு கூடுதல் நிதி வழங்க வலியுறுத்தினார்.கடந்த 2004ல் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தபோது நிதி பங்கீடு, 30.50 சதவீதம். பத்து ஆண்டுகள் முடிந்து செல்லும்போது, 2014ல் 32.5 சதவீதமாக மாறியது. மத்தியில் மோடி ஆட்சிக்கு வந்த பின், நிதி பங்கீட்டை 42 சதவீதமாக உயர்த்தினார்.குஜராத் முதல்வராக மோடி பேசிய போது, 30.50 சதவீதமாக இருந்த நிதி பங்கீடு தற்போது 42 சதவீதமாக உயர்ந்துஉள்ளது. நிதி பங்கீடு எந்த 'பார்முலா'வை பின்பற்றி வழங்கப்படுகிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். வேறு வேறு நிதிக்குழு வந்த நிலையில், 1960ல் கட்கில் என்ற பொருளாதார நிபுணர் ஒரு பார்முலாவை கொடுத்தார். அதன் அடிப்படையில் நிதி வழங்கப்படுகிறது. பார்லிமென்டில் மோடி பேசியது போல, நாடு உடல் போன்றது; அனைவரையும் பாதுகாக்க வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், எவ்வளவு வரி நேரடி வரி, ஜி.எஸ்.டி., வரி கிடைத்தது என்பது தொடர்பாக பேசியுள்ளார். நாம், 100 ரூபாய் ஜி.எஸ்.டி., செலுத்தினால், 50 ரூபாய் நேரடியாகவும், 21 ரூபாய் மறைமுகமாகவும் மாநிலத்திற்கு வந்து விடுகிறது. மீதி 29 ரூபாயில், மத்திய அரசு பாதுகாப்பு உள்ளிட்ட பல திட்டங்களுக்கு செலவிடுகிறது. ஆங்கில பத்திரிகை நடத்திய சர்வேயில், மக்களிடம் செல்வாக்கு இல்லாத முதல்வராக ஸ்டாலின் உள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.