தமிழக மீனவர்கள் சுதந்திரமாக மீன் பிடிக்க கச்சத்தீவை மீட்க வேண்டும் மீனவர் கூட்டமைப்பு வலியுறுத்தல்
ராமநாதபுரம்:தமிழக மீனவர்கள் சுதந்திரமாக மீன் பிடிக்க ஏதுவாக தாரை வார்க்கப்பட்ட கச்சத்தீவையும், அதை சுற்றியுள்ள 500 சதுர கி.மீ., பரப்பையும் மீட்க வேண்டும் என ராமநாதபுரத்தில் தேசிய பாரம்பரிய மீனவர்கள் கூட்டமைப்பினர் வலியுறுத்தினர்.இதுகுறித்து கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சின்னத்தம்பி கூறியதாவது: 1974ம் ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் கச்சத்தீவு இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்டது. கச்சத்தீவு வழங்கப்பட்டதால் 50 ஆண்டுகள், இரு தலைமுறைகளாக தமிழக மீனவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.ஆனால் கச்சத்தீவை வைத்து மத்திய, மாநில கட்சிகள் அரசியல் செய்கின்றன. இந்தியாவுக்கு சொந்தமான கச்சத்தீவையும் அதை சுற்றியுள்ள 500 சதுர கி.மீ., பரப்பையும் ராஜாங்க ரீதியாக மீட்க வேண்டும். அதனை மீட்டால் தமிழக மீனவர்கள் சுதந்திரமாக மீன் பிடிப்பதற்கான கடல் பகுதிகள் கிடைக்கும். இந்திய இலங்கை பிரச்னை தீரும். நாட்டின் பொருளாதாரமும் உயரும்.ஐம்பதாண்டுகளாக பா.ஜ., கச்சத்தீவை மீட்டு இந்தியாவுடன் இணைப்போம் என கூறி வருகின்றனர். தமிழகம் வரும் பிரதமர் மோடியும் இதுகுறித்து வாக்குறுதி கொடுக்கிறார். ஆனால் கச்சத்தீவு மீட்புக்கு ஒரு நடவடிக்கை கூட எடுக்கவில்லை. பா.ஜ., ஆட்சியில 360 தமிழக மீனவர்களின் படகுகள் இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது. தமிழக மீனவர்களின் பொருளாதாரம் ரூ.500 கோடிக்கு மேல் நிர்மூலமாகக்கப்பட்டுள்ளது. 10 மீனவர்கள் இலங்கை கடற்படையால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். தமிழக மீனவர்கள் இலங்கை சிறையில் அடைக்கப்பட்டு துன்புறுத்தப்படுகின்றனர்.லோக்சபா ஒப்புதல் இல்லாமல் இலங்கைக்கு வழங்கப்பட்ட கச்சத்தீவை திரும்ப பெற நடவடிக்கை எடுக்காதது மிகப்பெரிய ஏமாற்றமாகும். தி.மு.க., அரசு கச்சத்தீவை மீட்க லோக்சபாவில் கடுமையான போராட்டங்கள் எதையும் முன்னெடுக்கவில்லை. கச்சத்தீவை மீட்போம், என வாக்குறுதியளித்ததின் பேரில் மீனவர்கள் ஓட்டளித்து தி.மு.க., வை வெற்றி பெற வைத்தனர். தி.மு.க., அரசும் தொடர்ந்து கச்சத்தீவு பிரச்னையில் ஏமாற்றி வருகிறது என்றார்.