அடிதடி வழக்கில் சிக்கிய 5 பேர் சென்னைக்குள் நுழைய ஓராண்டு தடை
சென்னை: 'அடிதடி, பணம், நிலம் அபகரிப்பு உள்ளிட்ட வழக்குகளில் கைதாகி, ஜாமினில் வெளிவந்துள்ள அஜய் வாண்டையார், ராஜா உள்ளிட்ட ஐந்து பேர், ஓராண்டு சென்னை மாநகர காவல் நிலைய எல்லைக்குள் நுழையக்கூடாது' என, சென்னை போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவிட்டு உள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில், 'லார்டு ஆப் தி ட்ரிங்க்ஸ்' என்ற ஹைடெக் பார் உள்ளது. அங்கு, கடந்த மே மாதம், சென்னை பனையூரைச் சேர்ந்த அஜய் வாண் டையார் எனும் அஜய் ரோகன், 36; ஹோட்டல் உரிமையாளர் ராஜா மற்றும் அவரது கூட்டாளிகள், பெரும் ரகளையில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்து விசாரித்தனர். அப்போது அவர்கள், கட்டப்பஞ்சாயத்து, போலி ஆவணம் தயாரித்து நிலம் அபகரிப்பு, அரசு வேலை வாங்கி தருவதாக பண மோசடி, போதைப் பொருள் விற்பனை உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்டது தெரியவந்தது. அஜய் ரோகன் மற்றும் அவரது கூட்டாளிகள் கைதாகி ஜாமினில் வெளியே வந்துள்ளனர். இந்நிலையில், சென்னை மாநகர போலீசார் நேற்று வெளியிட்ட அறிக்கை: பொதுமக்களின் உயிருக்கும், உடைமைக்கும், அச்சுறுத்தல் தரக்கூடிய மற்றும் தங்களுக்கு எதிரான வழக்குகளில், நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டிய சாட்சிகளை மிரட்டக் கூடியவர்களாக, சென்னை பனையூரை சேர்ந்த அஜய் ரோகன். ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியை சேர்ந்த, ரவுடி நாகேந்திர சேதுபதி; மதுரை அண்ணா நகரை சேர்ந்த பிரேம்குமார்; சென்னை திருவான்மியூரை சேர்ந்த ராஜா; செல்வபாரதி ஆகியோர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள், சென்னை பெருநகர காவல் நிலைய எல்லைக்குள், நீதிமன்ற வழக்கு தொடர்பாகவோ அல்லது காவல் துறையினர் விசாரணை தொடர்பாகவோ இல்லாமல், வேறு எந்த ஒரு காரணத்திற்காகவும் நுழைவது, இன்றிலிருந்து அடுத்த ஓராண்டு காலத்திற்கு, முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மீறினால், அவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.