| ADDED : மார் 17, 2024 05:14 AM
நாகப்பட்டினம்: நாகையில், இருசக்கர வாகனத்தில் எடுத்து வரப்பட்ட ரூ.1.55 லட்சத்தை படையினர் பறிமுதல் செய்தனர்.தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததையடுத்து, நாகை மாவட்டத்தில் பறக்கும் படையினர் பல்வேறு பகுதிகளில் சோதனையில் ஈடுபட்டனர்.நாகூர், வெட்டாறு பாலம் அருகே தாசில்தார் வடிவழகன் தலைமையிலான பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். காரைக்காலில் இருந்து நாகை நோக்கி வந்த இரு சக்கர வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டப்போது, உரிய ஆவணம் இன்றி ஒரு லட்சத்து 55 ஆயிரம் ரூபாய் கொண்டு சென்றது தெரிய வந்தது.விசாரணையில் காரைக்காலில் இயங்கும் தனியார் பள்ளி ஊழியரான வெங்கடேசன், பள்ளியில் இருப்பில் இருந்த பணத்தை நாகையில் உள்ள பள்ளி உரிமையாளரிடம் கொடுக்க கொண்டு சென்றது தெரிய வந்தது.இதையடுத்து பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படையினர், நாகை, தாசில்தார் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.