அன்னிய செலாவணி மோசடி வழக்கு: நடிகர்கள் வீடுகளில் ஈ.டி., ரெய்டு
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
சென்னை:அன்னிய செலாவணி மோசடியில் ஈடுபட்டது தொடர்பாக, தமிழகம் மற்றும் கேரளாவில், நடிகர்கள் துல்கர் சல்மான், பிரித்விராஜ் உள்ளிட்டோர் வீடு, அலுவலகம் என, 17 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். பூடான் நாட்டு ராணுவ அதிகாரிகள் பயன்படுத்தி வந்த, 'லேண்ட் க்ரூசர், லேண்ட் ரோவர், மெர்சிடிஸ் பென்ஸ்' உள்ளிட்ட 190 சொகுசு கார்கள் ஏலம் விடப்பட்டன. தகவல் இக்கார்களை, நம் நாட்டில் உள்ள அருணாச்சல பிரதேசம் மற்றும் ஹிமாச்சல பிரதேச மாநிலங்களுக்கு கடத்தி வந்து, புது கார்கள் போல மெருகேற்றி, அதிக விலைக்கு சிலர் விற்று வருவதாக, சுங்கத் துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. தொடர் விசாரணையில், சொகுசு கார்களை, இந்திய ராணுவம் மற்றும் அமெரிக்க, ரஷ்ய நாட்டு துாதரகங்களின் முத்திரைகளை பயன்படுத்தி, தமிழகம், கேரளா, கர்நாடகா மற்றும் மஹாராஷ்டிரா மாநிலங்களில் மறுபதிவு செய்து இருப்பது தெரியவந்தது. மேலும், இக்கார்களை, கேரளாவில் நடிகர்கள் துல்கர் சல்மான், பிரித்விராஜ், அமித் சகலக்கல் மற்றும் தொழில் அதிபர்கள் அதிகளவில் வாங்கி இருப்பதும் தெரியவந்தது. இதனால், சொகுசு கார்கள் கடத்தலில் இவர்களுக்கும் தொடர்பு இருக்கலாம் என, சந்தேகம் எழுந்தது. பூடானில் வாகனங்களை, 'நும்கூர்' என அழைப்பதால், 'ஆப்பரேஷன் நும்கூர்' என பெயரிட்டு, சுங்கத்துறை அதிகாரிகள், செப்டம்பரில் துல்கர் சல்மான் வீடு உட்பட, 35 இடங்களில் சோதனை நடத்தினர். அப்போது, வெளிநாட்டு துாதரகங்களின் போலி முத்திரைகளையும், 35 சொகுசு கார்களையும் பறிமுதல் செய்தனர். மோசடி வழக்கு இந்நிலையில், துல்கர் சல்மான், பிரித்விராஜ், அமித் சகலக்கல் உள்ளிட்டோர், சொகுசு கார்களை கடத்தி, வரி ஏய்ப்பு மோசடியில் ஈடுபட்டது தொடர்பாக, அமலாக்கத் துறை அதிகாரிகள், அன்னிய செலாவணி மோசடி வழக்குப் பதிவு செய்துள்ளனர் . இவ்வழக்கு தொடர்பாக, கேரளாவில் எர்ணாகுளம், திருச்சூர், கோழிக்கோடு, மலப்புரம், கோட்டயம் உள்ளிட்ட நகரங்களில், தொழில் அதிபர்கள் மற்றும் இடைத் தரகர்கள் வீடுகளில் நேற்று சோதனை நடத்தினர். அதேபோல, கேரள மாநிலத்தில் கொச்சி பனம்பிள்ளி மற்றும் எலம்குளம் பகுதியில் உள்ள துல்கர் சல்மான் வீடு, கொச்சி தேவரா பகுதியில் உள்ள பிரித்விராஜ் மற்றும் அமித் சகலக்கல் வீடு, அலுவலங்களில் சோதனை நடத்தப்பட்டது. சென்னை அபிராம புரம், கிரீன்வேஸ் சாலையில் உள்ள துல்கர் சல்மான் வீடு, சினிமா பட தயாரிப்பு அலுவலகம் ஆகியவற்றில், கொச்சி மண்டல அமலாக்கத்துறை அதிகாரிகள் எட்டு பேர் சோதனை நடத்தினர். கோவையிலும் அவருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. தமிழகம், கேரளா என 17 இடங்களில் நேற்று நடத்தப்பட்ட சோதனையில், முக்கிய ஆவணங்கள் சிக்கி இருப்பதாக அமலாக்கத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். துல்கர் சல்மான், பிரபல நடிகர் மம்மூட்டியின் மகன். இவர், லக்கி பாஸ்கர் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். பிரித்விராஜ், தமிழில் மொழி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.