உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பெண்கள் குறித்து இழிவான பேச்சு முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு நோட்டீஸ்

பெண்கள் குறித்து இழிவான பேச்சு முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு நோட்டீஸ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சைவம், வைணவ சமயங்கள் மற்றும் பெண்கள் குறித்து இழிவாக பேசியது தொடர்பாக, பா.ஜ., கவுன்சிலர் உமா ஆனந்தனின் தனி நபர் மனுவுக்கு, முன்னாள் அமைச்சர் பொன்முடி பதிலளிக்க சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. சென்னையில் கடந்த ஏப்., 4ல் நடந்த கூட்டத்தில் பங்கேற்ற தி.மு.க.,வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் பொன்முடி, சைவம், வைணவ சமயங்களையும், பெண்களையும் இழிவுபடுத்தும் வகையில் பேசினார். அவரது பேச்சுக்கு, பலரும் கண்டனம் தெரிவித்தனர். பின், தி.மு.க., துணை பொதுச்செயலர் பதவியிலிருந்து பொன்முடி நீக்கப்பட்டார்; அவரது அமைச்சர் பதவியும் பறிபோனது. இழிவு பேச்சு தொடர்பாக, சென்னை மாநகராட்சி 134வது வார்டு பா.ஜ., கவுன்சிலர் உமா ஆனந்தன் சார்பில், வழக்கறிஞர்கள் எஸ்.மகேஷ், கே.பிரேம் ஆனந்த் ஆகியோர், சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் கடந்த ஜூனில் தனிநபர் புகார் மனு தாக்கல் செய்தனர். மனுவில், 'வெறுப்பு பேச்சு பேசிய முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிரான புகாரை விசாரித்து, மத ரீதியாக வெறுப்புணர்வை ஏற்படுத்துதல், மத உணர்வுகளை புண்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ், அவரை தண்டிக்க வேண்டும்' என குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த புகார் மனு, எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் மீதான வழக்குகளை விசாரிக்க நியமிக்கப்பட்ட ஜார்ஜ் டவுன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த புகாருக்கு முகாந்திரம் உள்ளதா என்பது குறித்து, வரும் 30ம் தேதிக்குள் முன்னாள் அமைச்சர் பொன்முடி பதிலளிக்க, நோட்டீஸ் அனுப்பும்படி ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த புகார் மனு, வரும் 30ம் தேதி, மூன்றாவது மாஜிஸ்திரேட் சி.சுந்தரபாண்டியன் முன் விசாரணைக்கு வருகிறது. ஏற்கனவே பொன்முடியின் பேச்சுகள், வெறுப்பு பேச்சு வரம்பிற்குள் வருகிறது என கூறி, தாமாக முன் வந்து, சென்னை உயர் நீதிமன்றம் வழக்கை விசாரணைக்கு எடுத்தது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி