உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சீட் வாங்கி தருவதாக மோசடி; காங்., தலைவர் மீது வழக்கு

சீட் வாங்கி தருவதாக மோசடி; காங்., தலைவர் மீது வழக்கு

சென்னை: கவுன்சிலர் சீட் வாங்கி தருவதாகக் கூறி, 50 லட்சம் பணம் பெற்று மோசடி செய்த புகாரில், காங்கிரஸ் எஸ்.சி., - எஸ்.டி., பிரிவு மத்திய சென்னை தலைவர் ரஞ்சன்குமார் மீது, ராயப்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.சென்னை தேனாம்பேட்டை, கணேசபுரத்தைச் சேர்ந்தவர் ஜானகி, 55. இவர், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், 2023 நவ., 30ல் அளித்த புகார்:கடந்த 2021ம் ஆண்டு நடந்த உள்ளாட்சி தேர்தலில், 116வது வார்டில் கை சின்னத்தில் போட்டியிட்டு தோல்வி அடைந்தேன். என் கணவருக்கு நன்கு பழக்கமான அசோக்குமார் என்பவர் வாயிலாக, ஷெனாய் நகர் புல்லா ரெட்டி அவென்யூவைச் சேர்ந்த ரஞ்சன் குமார் அறிமுகமானார். தமிழக காங்கிரஸ் எஸ்.சி., - எஸ்.டி., பிரிவு மத்திய சென்னை தலைவர் என்று கூறிய அவர், கவுன்சிலர் சீட் வாங்கித் தருகிறேன்; அதற்கு ரூ. 50 லட்சம் கொடுங்கள் என்று கேட்டார். அவருடைய பேச்சை நம்பி, அவர் கேட்டபடியே, எனது கணவர் மற்றும் மகன் வாயிலாக ரூ. 50 லட்சம் பணம் கொடுத்தோம்.ஹோட்டல் சவேராவுக்கு வரச்சொல்லி, அங்கு வைத்துத்தான் பணம் பெற்றார். 2021 டிசம்பரில் பணத்தை பெற்றவர், சொன்னபடி சீட் வாங்கித் தரவில்லை. பணத்தை திருப்பிக் கேட்டோம்; தராமல் ஏமாற்றினார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அந்த புகாரில் கூறப்பட்டிருந்தது. புகாரை பெற்றுக் கொண்ட போலீசார், ரஞ்சன் குமார் மீது நடவடிக்கை எடுக்காததால், ஜானகி, சைதாப்பேட்டை நீதிமன்றத்தை நாடினார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், மோசடி செய்த ரஞ்சன் குமார் மீது வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது. அதன்படி, நேற்று ராயப்பேட்டை போலீசார், காங்கிரஸ் பிரமுகர் ரஞ்சன் குமார், 49 என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி