சென்னை: கிராமங்களில் வசிக்கும் ஏழை மக்கள், சமையல் காஸ் சிலிண்டர் இணைப்பு பெற, பணமின்றி சிரமப்படுகின்றனர். எனவே, அவர்கள் பயன் பெற, 'பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா' எனப்படும், பிரதமரின் இலவச காஸ் இணைப்பு வழங்கும் திட்டத்தை, 2016 மே மாதம் மத்திய அரசு துவக்கியது.இத்திட்டத்தின் கீழ், ஏழ்மையில் உள்ள குடும்ப தலைவியருக்கு, காஸ் அடுப்பு, காஸ் இணைப்பிற்கான டிபாசிட் தொகை, ரப்பர் குழாய், ரெகுலேட்டர் மற்றும் சிலிண்டர் இலவசமாக வழங்கப்படுகின்றன. தமிழகத்தில், 32 லட்சம் பயனாளிகளுக்கு இலவச காஸ் இணைப்பு வழங்கப்பட்டு உள்ளது.மத்திய அரசு, 2023 - 24ல் இருந்து அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு, நாடு முழுதும் கூடுதலாக, 75 லட்சம் இலவச காஸ் இணைப்பு வழங்க ஒப்புதல் அளித்து, 1,650 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி உள்ளது. இதற்காக, பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், 2023 அக்டோபரில் இருந்து புதிய பயனாளிகளை கண்டறிந்து, காஸ் இணைப்பு வழங்கி வருகின்றன. கடந்த மூன்று மாதங்களில் இதுவரை, தமிழகத்தில், 2.89 லட்சம் பேருக்கும்; புதுச்சேரியில், 3,407 பேருக்கும் காஸ் இணைப்புகள் வழங்கப்பட்டு உள்ளன.