கோல்ட்ரிப் மருந்தில் அழகு சாதன தயாரிப்புக்கான மூலப்பொருள் கலப்பு: விசாரணையில் அம்பலம் தமிழக மருந்துகள் வாங்க ஆர்வம் குறைகிறது
மத்திய பிரதேசத்தில், 22 குழந்தைகள் இறப்புக்கு காரணமான, 'கோல்ட்ரிப்' மருந்துக்கு பயன்படுத்தப்பட்ட, 'புரோப்பிலின் கிளைக்கால்' மூலப்பொருள், அழகு சாதன பொருட்கள் தயாரிக்க பயன்படும் வகையை சார்ந்தது என, மருந்து கட்டுப்பாட்டு துறை ஆய்வில் தெரிய வந்துள்ளது. மத்திய பிரதேச மாநிலம் சிந்த்வாரா மாவட்டத்தில், 'கோல்ட்ரிப்' மற்றும், 'நெக்ஸ்ட்ரோ டி.எஸ்.' என்ற இருமல் மருந்து குடித்த, 22 குழந்தைகள் சிறுநீரகம் செயலிழந்து உயிரிழந்தனர். அதேபோல, ராஜஸ்தான் மாநிலத்திலும் குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். இதில், கோல்ட்ரிப் மருந்து, தமிழகத்திலும், நெக்ஸ்ட்ரோ டி.எஸ். மருந்து, குஜராத் மாநிலத்திலும் தயாரிக்கப்பட்டுள்ளது. குஜராத் மாநிலத்தில், அந்த மருந்து நிறுவனத்தின் உரிமம் ரத்து செய்யப் பட்டு, நிறுவனமும் மூடப்பட்டுள்ளது. தமிழகத்தில், கோல்ட்ரிப் மருந்து தயாரித்த, 'ஸ்ரீசன் பார்மா' நிறுவனத்தின் உற்பத்தி மட்டுமே நிறுத்தப்பட்டுள்ளது. விரைவில் மூடுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், ஸ்ரீசன் பார்மா நிறுவனத்தின் உரிமையாளர் ரங்கநாதன், 75, அவரது நிறுவனத்தின் மேலாளர் ஜெயராமன், ஆய்வக உதவியாளர் மகேஸ்வரி ஆகியோரை, மத்திய பிரதேச போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். இந்நிலையில், கோல்ட்ரிப் மருந்து தயாரிக்க பயன்படுத்தப்பட்ட, 'புரோப்பிலின் கிளைக்கால்' மூலப்பொருள், மருந்து தயாரிப்புக்கான மூலப்பொருளாக இல்லாமல், அழகு சாதன பொருட்கள் தயாரிக்க பயன்படும் மூலப்பொருள் என்பது, விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதுகுறித்து, மருந்து கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள் கூறியதாவது: 'புரோப்பிலின் கிளைக்கால்' வேதிப்பொருளில் இரண்டு வகைகள்; ஒன்று மருந்து தயாரிக்க பயன்படுகிறது. மற்றொன்று, அழகு சாதன பொருட்கள் தயாரிக்க பயன்படுகிறது. காய்ச்சல், இருமல் மருந்துகள் தயாரிக்கும் போது, அதிலுள்ள வேதிப்பொருட்கள் எளிதில் கரைய, 'புரோப்பிலின் கிளைக்கால்' என்ற மூலப்பொருட்களை பயன்படுத்துவர். உறுதி செய்யவில்லை இந்த மூலப்பொருளை பயன்படுத்தும் போது, 'டை எத்திலீன் கிளைக்கால்' என்ற ரசாயனம், 0.5 வரை மட்டுமே உருவாகும். இந்த அளவு, மனிதர்களுக்கு பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தாது. இந்த புரோப்பிலின் கிளைக்கால் தயாரிக்கும் நிறுவனங்கள், 250 லிட்டர் பேரலில் தான் விற்பனை செய்கின்றன. ஆனால், சிறு, குறு மருந்து தொழிற்சாலைகளுக்கு, மாதம், 25 லிட்டர் அளவு தான் தேவையாக உள்ளது. ஒரே நேரத்தில், 250 லிட்டர் வாங்கினால், 10 மாதம் வரை தேக்கமடையும். எனவே, சிறு, குறு நிறுவனங்கள், சில்லரை விற்பனையகங்களில், தங்களின் தேவைக்கு ஏற்ப, 'புரோப்பிலின் கிளைக்கால்' மூலப்பொருளை வாங்கி பயன்படுத்துகின்றன. இதில், கலப்பட மூலப்பொருட்களும் விற்பனை செய்யப்படுகின்றன. இவ்வாறு வாங்கும் மூலப்பொருட்களை, மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் தான் பரிசோதித்து, அதன் தன்மையை உறுதி செய்ய வேண்டும். ஸ்ரீசன் நிறுவனம், மூலப்பொருட்களையும் பரிசோதிக்கவில்லை. மருந்து தயாரித்த பின் உருவாகும், 'டை எத்திலீன் கிளைக்கால்' அளவையும் பரிசோதித்து உறுதி செய்யவில்லை. தரச்சான்றிதழ் ஸ்ரீசன் பார்மா நிறுவனம் தயாரித்த, 'கோல்ட்ரிப்' மருந்துக்கு, அழகு சாதன பொருட்கள் தயாரிக்க பயன்படுத்தும், 'புரோப்பிலின் கிளைக்கால்' மூலப்பொருளை, சில்லரை விற்பனையகத்தில் வாங்கியுள்ளனர். வழக்கமாக வாங்கும் சில்லரை விற்பனையகம் என்றாலும், அவர்கள் வேறு வகையான தரச்சான்று அடிப்படையில் அதை விற்றுள்ளனர். ஸ்ரீசன் பார்மா நிறுவ னம், மூலப்பொருளின் தன்மையை ஆராயாததுடன், மருந்து தயாரிப்புக்கான தரச்சான்றிதழ் இல்லாமல், அந்த மூலப்பொருள் வந்ததையும் கவனிக்க தவறிவிட்டது. மருந்து தயாரிக்கும் போது, 'புரோப்பிலின் கிளைக்கால்' வகையை பயன்படுத்தும்போது, 0.5 சதவீதம் மட்டுமே, 'டை எத்திலீன் கிளைக்கால்' உருவாகும். இது, மனிதர்களுக்கு பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாது. அதேநேரம், பெயின்ட், அழகு சாதன பொருட்கள் தயாரிப்பதற்கான, 'புரோப்பிலின் கிளைக்கால்' பயன்படுத்தினால், 'டை எத்திலீன் கிளைக்கால்' அளவுக்கு அதிகமாக இருக்கும். இந்நிறுவனம், அந்த புரோப்பிலின் கிளைக்கால் பயன்படுத்தியதால், 48.6 சதவீதமாக, 'டை எத்திலீன் கிளைக்கால்' அதிகரித்து, குழந்தைகளின் சிறுநீரகத்தை பாதித்துள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர். சில்லரை வியாபாரம் வேண்டாம்! புரோப்பிலின் கிளைக்கால் தயாரிக்கப்படும் நிறுவனத்தில், 250 லிட்டர் பேரலில் தான் அது கிடைக்கிறது. இதை, 25 முதல் 50, 100 லிட்டர் பேரலில் வழங்க, அரசு அறிவுறுத்த வேண்டும். அதேபோல, சில்லரை விற்பனையகங்களில், புரோப்பிலின் கிளைக்கால் போன்ற மூலப்பொருட்கள் வாங்கக்கூடாது என, அரசு உத்தரவிட வேண்டும். மேலும், 'புரோப்பிலின் கிளைக்கால்' மூலப்பொருட்கள் பயன்படுத்தி தயாரிக்கப்படும் மருந்தில், பொது மக்களும், டாக்டர்களும் அறியும் வகையில், 'சிவப்பு' நிற குறியீடு இருப்பதை, அரசு உறுதி செய்ய வேண்டும். அத்துடன் மூலப்பொருட்கள் மற்றும் மருந்து தயாரிப்பின் போது, அதன் தன்மையை பரிசோதிப்பதை, அரசு கண்காணித்து உறுதிப்படுத்துவதும், அவ்வப்போது பரிசோதிப்பதும் அவசியம். - ஜெயசீலன், தமிழக தலைவர், இந்திய மருந்து உற்பத்தியாளர்கள் சங்கம்மத்திய அரசு குழுவினர் ஆய்வு செய்யவில்லை! மத்திய பிரதேச அரசு தெரிவித்த பின், உடனடியாக சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் ஆய்வு செய்யப்பட்டு, மருந்து உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. தமிழக போலீசார் உதவியுடன், மத்திய பிரதேச போலீசார், அந்நிறுவன உரிமையாளரை கைது செய்துள்ளனர். அந்நிறுவனம் இனி இயங்காத அளவுக்கு, முழுமையாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மருந்து உற்பத்தி செய்யும் நிலையங்களில் ஆய்வு செய்வது கட்டாயம். கடந்த மூன்று ஆண்டுகளாக, மத்திய அரசு குழுவினர் எவ்வித ஆய்வையும் செய்யவில்லை. கடந்த இரண்டு ஆண்டுகளாக, 'கோல்ட்ரிப்' மருந்தை ஆய்வு செய்யாத, 2 முதுநிலை மருந்து ஆய்வாளர்கள், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளனர். மேலும் மருந்தின் தன்மை குறித்து, ஒடிஷா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. தமிழக அரசின் இந்நடவடிக்கையால், பல்வேறு மாநிலங்களில் ஏற்படவிருந்த உயிரிழப்புகள் தடுக்கப்பட்டுள்ளன. - சுப்பிரமணியன், மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் தமிழகம், குஜராத் மருந்துகளை வாங்க ஆர்வம் குறைகிறது இந்தியாவில் தமிழகம், குஜராத் மாநிலங்களில் தான் அதிகளவு மருந்து உற்பத்தி தொழிற்சாலைகள் உள்ளன. இம்மாநிலங்களில் தயாரிக்கப்படும் மருந்துகள், இந்தியாவை காட்டிலும் வெளிநாடுகளுக்கு அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. தமிழகத்தை பொறுத்தவரையில், 397 மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் உள்ளன. இங்கிருந்து, 100 நாடுகளுக்கு, 15,000 கோடி ரூபாய் வரை, ஆண்டுக்கு மருந்துகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில், தமிழகம் மற்றும் குஜராத் மாநிலங்களில் உள்ள தயாரிக்கப்பட்ட மருந்துகள் வாயிலாக குழந்தைகள் இறந்துள்ளன. எனவே, இம்மாநிலங்களின் மருந்துகளை வாங்கும் நாடுகளிடையே, இது அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால், இரண்டு மாநில மருந்து நிறுவனங்களிடம், மருந்து, மாத்திரை வாங்க, வெளிநாடுகளில் ஆர்வம் குறைந்து காணப்படுகிறது. ஓரிரு மாதங்களுக்கு பின், பாதிப்பு தெரியவரும் என, மருந்து உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். - நமது நிருபர் -