உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சிறையில் நன்னடத்தை அவசியம்: பக்ருதீனுக்கு நீதிபதிகள் அறிவுரை

சிறையில் நன்னடத்தை அவசியம்: பக்ருதீனுக்கு நீதிபதிகள் அறிவுரை

சென்னை : 'சிறையில் நன்னடத்தையுடன் நடந்துகொள்ள வேண்டும்; வழக்குகளை விரைந்து முடிக்க போதிய ஒத்துழைப்பு வழங்க வேண்டும்' என, போலீஸ் பக்ருதீனுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுரை வழங்கி உள்ளது.சேலம் ஆடிட்டர் ரமேஷ் கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய போலீஸ் பக்ருதீன், 45, சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்; 10 ஆண்டுகளாக சிறையில் உள்ள அவர், தன்னை தனிமை சிறையில் அடைத்துள்ளதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.இம்மனு, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், எம்.ஜோதிராமன் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜர்படுத்தப்பட்ட போலீஸ் பக்ருதீனிடம், 'சிறையில் என்ன நடந்தது' என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.அதற்கு பதிலளித்த பக்ருதீன், ''என் தந்தை காவல் துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றார். சிறையில் உள்ள உணவகத்தை திறக்கக்கோரி வழக்கு தொடர்ந்தேன். ''அதற்கு பழிவாங்கும் விதமாக, கண்காணிப்பு கேமராக்களை அணைத்துவிட்டு, போலீசார் கடுமையாக தாக்கினர். பி.ஏ., அரசியல் அறிவியல் படித்து வரும் எனக்கு, தேவையான புத்தகங்கள் வழங்கப்படுவதில்லை. உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட என் தாயை பார்க்க விடுப்பு வழங்க வேண்டும்,'' என்று கூறினார். காவல் துறை தரப்பில், 'மனுதாரர் மீது, 10க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. வழக்கு விசாரணையின்போது, நீதிபதிக்கு எதிராக கருத்து தெரிவித்தார். சிறை அதிகாரி மீது தாக்குதல் நடத்தியுள்ளார்' என, தெரிவிக்கப் பட்டது.இதையடுத்து, 'நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும். சிறை அதிகாரிகளுடன் மோதல் போக்கை கடைப்பிடிக்கக் கூடாது. நன்னடத்தையுடன் நடந்து கொள்ள வேண்டும். 'சிறை விதிகளுக்கு உட்பட்டு, தன் கல்வியை தடையின்றி தொடர, மனுதாரருக்கு தேவையான பாடப்புத்தகங்கள் உள்ளிட்ட சலுகைகளை சிறை நிர்வாகம் வழங்க வேண்டும்' என்று நீதிபதி கள் அறிவுறுத்தினர்.தாயை சந்திக்க அனுமதி கோரியது தொடர்பாக, நாளை உத்தரவு பிறப்பிக்கப்படும் எனக் கூறிய நீதிபதிகள், விசாரணையை தள்ளிவைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை