| ADDED : டிச 26, 2024 01:07 AM
திருப்புவனம் : திருப்புவனத்தில் பிரேக் பிடிக்காமல் ஓடிய டவுன் பஸ்சில் இருந்த பயணிகளின் சப்தம் கேட்டு ரோட்டில் சென்ற மக்கள் கற்களை வைத்து பஸ்சை நிறுத்தினர். பரமக்குடி கிளையை சேர்ந்த டிஎன் 63 என் 1307 என்ற எண் அரசு டவுன் பஸ் பரமக்குடியில் இருந்து பார்த்திபனுார், மானாமதுரை வழியாக திருப்புவனம் வரை இயக்கப்படுகிறது. இந்த வழித்தடத்தில் இயக்கப்படும் ஒரே டவுன் பஸ் என்பதால் எப்போதும் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும். காலை 9:30 மணிக்கு திருப்புவனத்தில் இருந்து 20 பயணிகளுடன் பஸ் கிளம்பியது. சற்று துாரம் சென்ற உடன் பஸ்சின் பிரேக் பிடிக்க வில்லை. பயணிகளில் சிலர் ஓடும் பஸ்சில் இருந்து குதித்து விட்டனர். போலீஸ் ஸ்டேஷன் அருகே பயணிகளின் சத்தம் கேட்டு ரோட்டில் நடந்து சென்றவர்களும், ஓடும் பஸ்சில் இருந்து குதித்த கண்டக்டரும் இணைந்து டயரின் முன் கற்களை போட்டு நிறுத்தினர்.பயணிகள் கூறியது: இந்த பகுதியில் இயக்கப்படும் டவுன் பஸ்கள் ஹெட்லைட் எரியாதது, பிரேக் பிடிக்காதது, உள்ளே விளக்குகளும் எரியாதது என பல பிரச்னைகளுடன் தான் ஓட்டப்படுகின்றன. டிரைவர், கண்டக்டர் புகார் செய்தாலும் பணிமனைகளில் கண்டு கொள்வதில்லை என்றனர். கிளை மேலாளர் ரத்னம் கூறுகையில், பிரேக் ஜாம் ஆகி இறுகி கொண்டதால் பஸ் நிற்கவில்லை. சிறிது நேரம் கழித்து பிரேக் தானே சரியாகி பஸ்சை ஓட்டி வந்து விட்டனர், என்றார்.