உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அரசு கேபிள் டிவி இணைப்பு இரண்டு லட்சமாக சரிந்தது பழுதான செட் -- டாப் பாக்ஸ்சால் அவலம்

அரசு கேபிள் டிவி இணைப்பு இரண்டு லட்சமாக சரிந்தது பழுதான செட் -- டாப் பாக்ஸ்சால் அவலம்

சேலம்: பழுதான, 'செட் -- டாப் பாக்ஸ்' வழங்குவதால், சேலம் மாவட்டத்தில், அரசு கேபிள் இணைப்பு எண்ணிக்கை, 2 லட்சமாக சரிந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.சேலம் மாவட்டத்தில் அரசு கேபிள் இணைப்பு, 3.75 லட்சமாக இருந்தது, தற்போது, 2.03 லட்சமாக குறைந்துவிட்டது. சேவை குறைபாடால் இரண்டரை ஆண்டுகளில், 1.72 லட்சம் இணைப்பு சரிந்துள்ளது. இதே நிலை நீடித்தால் அடுத்த இரண்டு ஆண்டுகளில் அரசு கேபிள் நிறுவன செயல்பாடு கேள்விக்குறியாகும் என, கேபிள் ஆப்பரேட்டர்கள் தெரிவித்துள்ளனர்.அரசு கேபிள் வாயிலாக, 160 சேனல்கள் ஒளிபரப்பு செய்யப்படும் என அறிவித்திருந்தாலும் அதில், பெரும்பாலான சேனல்கள் சரிவர தெரிவதில்லை. ஒளிபரப்பாகும் சேனலும் அடிக்கடி, 'மக்கர்' செய்கின்றன. அத்துடன், நிர்ணயிக்கப்பட்ட மாத கட்டணம், 180க்கு பதில், 200 ரூபாய் வசூலிப்பதோடு, பராமரிப்பு கட்டணமாக தலா, 10 ரூபாய் சேர்த்து, 210 ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது.அதுவே தனியார் கேபிள் வாயிலாக ஒளிபரப்பாகும், 500க்கும் மேற்பட்ட சேனலுக்கு, 200 - 230 ரூபாய் கட்டணம் பெறப்படுகிறது. பராமரிப்பு கட்டணம் கிடையாது.துல்லிய ஒளிபரப்பால், தனியார் கேபிளுக்கு வாடிக்கையாளர்கள் மாறி வருகின்றனர். குறிப்பாக, ஆளுங்கட்சிக்கு ஆதரவானவர்கள் நடத்தும் கேபிள் டிவிக்கு சாதகமாக அதிகாரிகள் செயல்படுவதால், சேலத்தில் கேபிள் டிவி தொழில் செய்த பிரபல நிறுவனம் கூட தங்கள் இணைப்பை, அவர்களுக்கு விட்டுக் கொடுத்து வருகிறது.இதுகுறித்து, தமிழ்நாடு கேபிள் ஆப்பரேட்டர் பொது நலச்சங்க மாநில முன்னாள் துணைத்தலைவர் தாமோதரன் கூறியதாவது:தமிழகத்தில் அரசு உட்பட, 60 கேபிள் டிவி நிறுவனங்கள் உள்ளன. அதில், செட் - டாப் பாக்ஸ் எண்ணிக்கையில், டி.சி.சி.எல்., முதலிடம், அரசு கேபிள், இரண்டாம் இடத்தில் உள்ளன. ஆனால், சேலம் மாவட்டத்தில், தனியார் உட்பட மொத்தம் உள்ள, 4 லட்சம் கேபிள் இணைப்பில், அரசு கேபிள் எண்ணிக்கை, 2 லட்சத்துக்கும் குறைவாகிவிட்டது. அரசு கேபிள் நடத்தும் ஆப்பரேட்டர்கள் கைவசம் தான், தனியார் கேபிள் டிவி இணைப்பும் உள்ளது.அரசு தரப்பில் வழங்கப்படும் செட் - டாப் பாக்ஸ் பழுதானால் அதற்கென சர்வீஸ் சென்டர் கிடையாது. சிக்னல் பிரச்னை புகார் வந்தால், பைபர் ஆப்டிக்கல் லைன் சரிசெய்ய ஆள் இல்லை. கூடுதலாக பராமரிப்பு கட்டணமும் செலுத்த வேண்டும்.கேபிள் தாசில்தார், டிஜிட்டல் சிக்னல் டிஸ்டிபியூட்டர் பெயரில் தனித்தனி வசூல் நடக்கிறது. அதனால் ஆப்பரேட்டர்கள், பழுதான அரசு செட் - டாப் பாக்ஸை, அரசு கேபிள் நிறுவனத்திடம் ஒப்படைத்துவிட்டு தனியாருக்கு மாறுவதால் அரசு கேபிள் எண்ணிக்கை, தமிழகம் முழுதும் வெகுவாக சரிந்து வருகிறது. ஒப்படைக்கப்படும் பழுதான செட் - டாப் பாக்ஸை, தற்போது அரசு கேபிள் வாடிக்கையாளருக்கு வழங்கி வருவதால் எந்த பிரயோஜனமும் இல்லை.இவ்வாறு அவர் கூறினார்.சேலம் கேபிள் 'டிவி' தாசில்தார் பிரகாஷ் கூறுகையில், ''மாவட்டத்தில், 1,139 ஆப்பரேட்டர்கள் வாயிலாக கேபிள் சேவை அளிக்கப்படுகிறது. வாடிக்கையாளர்கள் பெரும்பாலும் எல்.இ.டி., 'டிவி' வைத்திருப்பதால், ஹெச்.டி., செட் - டாப் பாக்ஸ் தேவை கட்டாயமாகிறது. ''ஆனால், அரசு தரப்பில் அதன் வினியோகம், நான்கு ஆண்டுகளாக கிடையாது. மாவட்டத்தில் தற்போது, 5,400 செட் - டாப் பாக்ஸ் மட்டும் உபயோகத்தில் உள்ளன. அதனால் அரசு கேபிள், 'டிவி' இணைப்பு எண்ணிக்கை குறைந்துவிட்டது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை