சென்னை: '-தமிழகத்தில் நான்கு மாவட்டங்களில், புதிய மணல் குவாரிகள் திறக்க, 26 இடங்கள் தேர்வு செய்யப்பட்ட நிலையில், மேலும், 14 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளன' என்று, நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில், 30க்கும் மேற்பட்ட இடங்களில் மணல் குவாரிகள் திறக்க, சுற்றுச்சூழல் அனுமதி கிடைத்தும், 2020ல், 10 இடங்களில் மட்டுமே மணல் குவாரிகள் திறக்கப் பட்டன. குவாரிகளில் இருந்து மணலை விற்பனை யார்டுகளுக்கு கொண்டு வருவது உள்ளிட்ட பணிகளில், தனியார் ஒப்பந்ததாரர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். மூடப்பட்டன
இவர்கள், சட்ட விரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக புகார் எழுந்த நிலையில், அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியது. இதையடுத்து அந்த, 10 மணல் குவாரிகளும் மூடப்பட்டன.நீர்வளத்துறை அனுமதியுடன் செயல்படும் குவாரிகள் இல்லாததால், ஆற்றுப்படுகைகளில், எவ்வித அனுமதியும் இன்றி மணல் எடுப்பது வெகுவாக அதிகரித்தது. சட்டவிரோத மணல் கொள்ளையை தடுக்க, முறையான சுற்றுச்சூழல் அனுமதியுடன், புதிய மணல் குவாரிகள் திறக்க நீர்வளத்துறை முடிவு செய்தது. முதல் கட்டமாக விழுப்புரம் கோட்டத்தில், கடலுார் மாவட்டத்தில், 17; ராணிப்பேட்டை, 4; வேலுார், 3; விழுப்புரம், 2 என மொத்தம், 26 இடங்கள் தேர்வு செய்யப்பட்டன. இந்த இடங்களில், புதிய மணல் குவாரிகள் திறக்க பல்வேறு அனுமதிகள் பெறும் பணிகள் நடந்து வருவதாக, நீர்வளத்துறை அதிகாரிகள் சமீபத்தில் கூறினர். அத்துடன், மேலும், 14 மணல் குவாரிகள் திறக்க தற்போது இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அவசிய தேவை
இதுதொடர்பாக, தமிழக மணல், எம்-.சாண்ட் லாரி உரிமையாளர்கள் ஒருங்கிணைந்த நல சம்மேளன துணைச்செயலர் ஆர்.கோபாலகிருஷ்ணன் அளித்த மனுவுக்கு, நீர்வளத் துறையின் கனிமம் மற்றும் கண்காணிப்புக்கான திருச்சி உபகோட்ட உதவி செயற்பொறியாளர் அண்ணாமலை அளித்த பதில்: திருச்சி மாவட்டம் காவிரி ஆற்றில், 3; கொள்ளிடம் ஆற்றில், 6; அரியலுார் மாவட்டம் கொள்ளிடம் ஆற்றில், 5 என, 14 இடங்கள் புதிய மணல் குவாரிகள் அமைக்க தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதற்காக சுற்றுச்சூழல் உள்ளிட்ட பல்வேறு நிலை அனுமதிகள் பெறும் பணிகள் நடந்து வருகின்றன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. தமிழக மணல், எம்-. சாண்ட் லாரி உரிமையாளர்கள் ஒருங்கிணைந்த நல சம்மேளன தலைவர் ஆர்.பன்னீர்செல்வம் கூறியதாவது:தமிழகத்தில் கட்டுமான பணிகளின் தேவையை, 'எம்.சாண்ட்' ஆலைகளால் மட்டும் பூர்த்தி செய்ய முடியாத நிலை உள்ளது. இதனால், சாதாரண மக்களின் வீடு கட்டும் பணிகளுக்கு, ஆற்று மணல் அத்தியாவசிய தேவையாக உள்ளது. இதை கருத்தில் வைத்து, மணல் அதிகம் உள்ள இடங்களில் குவாரிகள் திறந்து, ஆன்லைன் முறை யில், மணல் விற்பனையை வெளிப்படைத் தன்மையுடன், தமிழக அரசு மீண்டும் துவங்க வேண்டும். அப்போது தான் மக்களுக்கு நியாயமான விலையில், மணல் கிடைப்பதற்கான வாய்ப்பு ஏற்படும்.இவ்வாறு அவர் கூறினார்.