அரசு ஊழியர்கள் கண்டனம்
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில தலைவர் டேனியல் ஜெய சிங், பொதுச்செயலர் செல்வம்: சென்னை மருத்துவமனையில் மருத்துவர் பாலாஜியை, நோயாளி ஒருவரின் குடும்ப உறுப்பினர் கத்தியால் குத்தி, கொலை வெறி தாக்குதல் நடத்தியதை கண்டிக்கிறோம். கடந்த மாதம் திருச்சி மாவட்டம் ஒரத்துார் ஆரம்ப சுகாதார நிலையத்தில், பெண் செவிலியர் மீது பாலியல் வன்கொடுமை நடந்துள்ளது. மதுரை அரசு மருத்துவமனையில் இரவு பணியில் இருந்த பெண் மருந்தாளுநர், ஒரு சமூக விரோதியால் தாக்கப்பட்டுள்ளார். அப்பெண் போலீசில் புகார் செய்தும் நடவடிக்கை எடுக்காததால், அந்த நபர் மீண்டும் மிரட்டல் விடுக்கிறார். மருத்துவமனைகளில் இது போன்று நடப்பது, ஊழியர்களை அச்சத்திற்கு உள்ளாக்கியுள்ளது. தமிழக அரசு, தாக்குதல் நடத்தியோரை உடனே கைது செய்து தண்டனை பெற்றுத் தர வேண்டும். பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் 40 சதவீதம் வரை காலியிடங்கள் பூர்த்தி செய்யப்படாமல் உள்ளன. இவ்வாறு பணிச்சுமையுடன் பணிபுரியும் ஊழியர்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். போலீசார் ரோந்து பணியின்போது ஆரம்ப சுகாதார நிலையங்களை கண்காணிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க மாநில தலைவர் தமிழ்ச்செல்வி, பொதுச்செயலர் ஜெயராஜ ராஜேஸ்வரன்: உயிர் காக்கும் மருத்துவர்களுக்கே பாதுகாப்பில்லாத சூழல், மிகுந்த அதிர்ச்சி, வேதனையை அளிக்கிறது. சமீபகாலமாக, அரசு ஊழியர்கள் பணி செய்யும் இடங்களில் தாக்கப்படுவது தொடர்ந்து அதிகரித்துள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் முளையிலேயே கிள்ளியெறியப்பட வேண்டும். தமிழக அரசும், போலீசாரும், பாதிக்கப்பட்டுள்ள மருத்துவரின் உயிரைக் காக்க துரித நடவடிக்கை மேற்கொள்ளவும், இதில் ஈடுபட்டவர்களை உடனே கைது செய்து, சட்டப்படி தண்டனை பெற்றுத் தரவும், பணியில் இருக்கும் அரசு ஊழியர்களின் குறிப்பாக மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.