சீமை கருவேல மரங்களை அகற்ற திட்ட அறிக்கை தர அரசுக்கு அவகாசம்
சென்னை : தமிழகம் முழுதும் சீமை கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பாக, விரிவான திட்ட அறிக்கை தாக்கல் செய்ய, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம், மூன்று வாரம் அவகாசம் வழங்கியுள்ளது. . தமிழகத்தில், சீமை கருவேல மரங்களை அகற்ற உத்தரவிடக்கோரி, ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந்தனர். இவற்றை, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரத சக்கரவர்த்தி அடங்கிய சிறப்பு அமர்வு விசாரித்து வருகிறது. இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, வனத்துறை தரப்பில் சிறப்பு பிளீடர் டி.சீனிவாசன், தமிழக அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் ஆகியோர் ஆஜராகி, ஊரக வளர்ச்சித் துறை மற்றும் நீர் வளத்துறை அறிக்கைகளை தாக்கல் செய்தனர். நீர்வளத்துறை அறிக்கையில், '2025 - -26ம் ஆண்டு 1.03 லட்சம் ஏக்கர்; 2026- - 27ம் ஆண்டு 86,100 ஏக்கர்; 2027 - -28ம் ஆண்டு 90,805 ஏக்கர் பரப்பளவுக்கு சீமை கருவேல மரங்கள் அகற்ற திட்டமிடப்பட்டு உள்ளது. நீர் நிலைகளில் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்ற, தீவிரமாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது, என, தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஊரக வளர்ச்சித் துறை அறிக்கையில், 'தமிழகம் முழுதும், 517 கிராமங்களில், சீமை கருவேல மரங்கள் முழுமையாக அகற்றப்பட்டு விட்டன' என்று, கூறப்பட்டு இருந்தது. அதைத்தொடர்ந்து மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் ஆஜராகி, ''தமிழகம் முழுதும் சீமை கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பாக, கடந்த 25ம் தேதி தலைமை செயலர் தலைமையில், உயர் அதிகாரிகள் கூட்டம் கூட்டப்பட்டு விவாதிக்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக, விரிவான திட்ட அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும். அக்டோபர் முதல் ஜனவரி வரை மழை காரணமாக, சீமை கருவேல மரங்களை அகற்றும் பணிகளை மேற்கொள்வதில் சற்று சிரமம் உள்ளது,'' என்றார். இதை கேட்ட நீதிபதிகள், 'சீமை கருவேல மரங்கள் முழுமையாக அகற்றப்படுவதுடன், அவை மீண்டும் முளைக்காமல் கண்காணிக்க வேண்டும். சீமை கருவேல மரங்கள், முழுமையாக அகற்றப்பட்டு உள்ளன என, பட்டியலிடப்பட்ட கிராமங்களில் நேரில் ஆய்வு செய்ய வேண்டும். இப்பணியில், அனைத்து துறைகளும், ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். 'ஒவ்வொரு மாதமும், சில கிராமங்களை சீமை கருவேல மரங்கள் இல்லாத கிராமங்களாக அறிவிக்க வேண்டும். வேருடன் அகற்ற இயந்திரங்களை பயன்படுத்த வேண்டும்' என, தெரிவித்து, சீமை கருவேல மரங்களை அகற்ற விரிவான திட்ட அறிக்கை தாக்கல் செய்ய, மூன்று வாரம் அவகாசம் வழங்கி, விசாரணையை தள்ளி வைத்து உத்தரவிட்டனர்.