ஜல் ஜீவன் குடிநீருக்கு மாதம் ரூ.30 கட்டணம் கிராம மக்களிடம் வசூலிக்க அரசு உத்தரவு
சென்னை:மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ், தமிழகத்தில், 1.25 கோடி கிராமப்புற வீடுகளுக்கு, குடிநீர் இணைப்பு வழங்க திட்டமிடப்பட்டது. இதுவரை ஒரு கோடி வீடுகளுக்கு வழங்கப்பட்டு உள்ளது. இதன் வழியாக, ஒரு நபருக்கு சராசரியாக, தினமும் 55 லிட்டர் பாதுகாக்கப்பட்ட குடிநீர் கிடைப்பது உறுதி செய்யப்படுகிறது. இப்பணிக்கு முதல் கட்டமாக, 3,249 கோடி ரூபாய்; இரண்டாம் கட்டமாக 3,307 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இப்பணிகளை முடிக்க, 2025 மார்ச் வரை, மத்திய அரசிடம் தமிழக அரசு அவகாசம் கேட்டுள்ளது.இந்நிலையில், குடிநீர் வினியோகம் மற்றும் பராமரிப்பு பணிகளை செய்வதற்காக, குடிநீர் இணைப்பு பெற்ற வீடுகளில், மாதம் 30 ரூபாய் கட்டணம் வசூலிக்க, ஊரக வளர்ச்சி துறை உத்தரவிட்டுள்ளது. மேலும், அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்ட ஊராட்சிகளை, 'வீடுதோறும் குடிநீர் வழங்கப்பட்ட ஊராட்சி' என்று ஊராட்சி தலைவர்கள் சான்றளிக்க வேண்டும். குடிநீர் இணைப்பு வழங்கப்பட்ட வீட்டின் குடும்ப தலைவர் ஆதார் எண்ணை, ஜல் ஜீவன் இயக்க இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து, ஊரக வளர்ச்சி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:ஜல் ஜீவன் குடிநீர் திட்டத்தை செயல்படுத்த, மத்திய அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, மலைப்பகுதி, வனப்பகுதி, 50 சதவீதத்திற்கு மேல் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வசிக்கும் பகுதி ஆகியவற்றில், இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கான மூலதன செலவில், 5 சதவீதம், மற்ற பகுதிகளில் 10 சதவீத தொகையை, மக்களிடமிருந்து பணமாக, பொருளாக அல்லது உடல் உழைப்பாக பெற வேண்டும்.இதற்காக மாதந்தோறும் குறைந்தபட்சம், 30 ரூபாய் கட்டணம் வசூலிக்க வேண்டும். இதை முறையாக பின்பற்றினால்தான், இத்திட்டத்திற்கான 50 சதவீத பங்களிப்பு நிதியை, மத்திய அரசு வழங்கும். எனவே, கிராம மக்களிடம் குடிநீர் கட்டணம் வசூலிப்பதை உறுதிசெய்ய, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.