உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / துணைவேந்தர்களுக்கு போலீஸ் மிரட்டல்: முதல்வர் மீது கவர்னர் ரவி குற்றச்சாட்டு

துணைவேந்தர்களுக்கு போலீஸ் மிரட்டல்: முதல்வர் மீது கவர்னர் ரவி குற்றச்சாட்டு

சென்னை: 'கவர்னரின் மாநாட்டில் துணைவேந்தர்களை பங்கேற்க விடாமல் தடுத்த, முதல்வரின் செயல் அவசர காலத்தை நினைவூட்டுகிறது' என, கவர்னர் ரவி தெரிவித்துள்ளார். சமூக வலைதளத்தில், அவர் வெளியிட்டுள்ள பதிவு:முன்கூட்டியே திட்டமிடப்பட்டிருந்த மாநாட்டில், மாநில பல்கலைகளின் துணைவேந்தர்களை பங்கேற்க விடாமல், முதல்வர் ஸ்டாலின், காவல் துறையை பயன்படுத்தி தடுத்த விதம், அவசர கால நாட்களை நினைவூட்டுகிறது.

விசாரணை

மாநில உயர்கல்வித்துறை அமைச்சர், மாநாட்டில் பங்கேற்க வேண்டாம் என, துணை வேந்தர்களை தொலைபேசியில் மிரட்டிய நிலையில், அது பலன் அளிக்காததால், முதல்வர் ஸ்டாலின் காவல் துறையை பயன்படுத்திஉள்ளார். மாநாட்டு நாளில், ஒரு துணைவேந்தர் விசாரணைக்காக, காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். மற்ற துணைவேந்தர்கள் தங்கிய ஊட்டி விடுதிகளின் அறைக்கதவுகள் நள்ளிரவில் தட்டப்பட்டுள்ளன.

துஷ்பிரயோகம்

அவர்களிடம், 'மாநாட்டில் பங்கேற்றால், உயிருக்கு மோசமான விளைவுகள் நேரிடும்; வீடு திரும்ப அனுமதிக்கப்பட மாட்டீர்கள்' என, காவல் துறையினரால் அச்சுறுத்தப்பட்டு உள்ளனர். இது, காவல் துறையின் அப்பட்டமான துஷ்பிரயோகம். இங்கு காவல் துறையின் ராஜ்ஜியமா நடக்கிறது? மாநிலத்தில், கல்வி மாநாட்டில் பங்கேற்க துணைவேந்தர்களுக்கு கல்வி சுதந்திரம் இல்லையா அல்லது தலித் மற்றும் ஏழை மாணவர்களுக்கு பெரிதும் உதவும் மாநில பல்கலைகளின் தரத்தை உயர்த்தினால், மாணவர்களிடம் ஆர்வத்தையும் ஊக்கத்தையும் ஊட்டும். அது, தன் அரசியல் எதிர்காலத்தை அச்சுறுத்தும் என, முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா?இவ்வாறு கவர்னர் ரவி கூறியுள்ளார்.

'வீம்புக்கு அரசியல் செய்கிறார் ரவி'

உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் அறிக்கை: தமிழக சட்டசபையில், இரண்டாவது முறையாக நிறைவேற்றி அனுப்பப்பட்ட, 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கும் விவகாரத்தில், கவர்னருக்கு காலக்கெடு நிர்ணயித்த நீதிபதிகள், கவர்னரால் அனுப்பி வைக்கப்படும் மசோதாக்கள் மீது முடிவு செய்ய, ஜனாதிபதிக்கும் காலக்கெடு நிர்ணயித்துள்ளனர்.இந்த தீர்ப்புக்குப் பிறகே, தமிழக அரசோடு மல்லுக்கட்ட வேண்டும் என்ற ஆத்திரத்தில் கவர்னர், துணைவேந்தர்கள் மாநாட்டை நடத்தி உள்ளார். உச்ச நீதிமன்ற தீர்ப்பை அறிந்த துணைவேந்தர்கள், அதை புறக்கணித்துள்ளனர். இதற்கு, மாநில அரசு எப்படி பொறுப்பாகும்? இதை எல்லாம் தெரிந்தும், கவர்னர் வீம்புக்கு அரசியல் செய்கிறார். சட்டத்தை மதிக்காத கவர்னரை போல், துணைவேந்தர்களும் நடக்க வேண்டுமா?கவர்னர், மாநில பல்கலைகளின் வேந்தராக செயல்பட, அரசமைப்புச் சட்டத்தில் எந்த ஏற்பாடும் செய்யவில்லை. தமிழக அரசு போட்ட வழக்கு, ராஜ்பவனை தாண்டி, ராஷ்டிரபதி பவன் வரை பதம் பார்த்து விட்டது. அந்த தீர்ப்பை, துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் விமர்சித்திருக்கிறார். அவர், மேற்கு வங்க கவர்னராக இருந்தபோது நடத்திய அடாவடிகளைப் போல, ரவியும் செயல்படுவதால், அவர் கலந்து கொண்டுள்ளார்; அதில் ஆச்சரியம் இல்லை. அமலாக்கத்துறை, சி.பி.ஐ., வருமான வரித்துறை, என்.ஐ.ஏ., உள்ளிட்ட அதிகார அமைப்புகளை வைத்துதான், மத்திய அரசு எதிர்க்கட்சிகளை மிரட்டுகிறது. மிரட்டல் அரசியல் பா.ஜ.,வின் மரபணுவில் ஊறிக்கிடக்கிறது. தமிழக அரசு, அவற்றை சட்டரீதியாக எதிர்கொள்கிறது. மசோதாக்கள் விவகாரத்திலும் அதைத்தான் செய்துள்ளது. மாநில உரிமைகளுக்காக, துணிந்து எதிர்த்து நிற்பதுதான் எங்கள் மரபணுவில் உள்ளது.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.சட்டசபையில், உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் பேசியதாவது:பல்கலைகளுக்கு துணைவேந்தர்கள் நியமிக்கும் அதிகாரத்தை, மாநில முதல்வர்களுக்கு, உச்ச நீதிமன்ற தீர்ப்பு வாயிலாக, முதல்வர் ஸ்டாலின் பெற்றுத் தந்துள்ளார். முதல்வருக்கு பாராட்டு விழா நடத்த வேண்டும் என, தமிழகத்தில் இருக்கும் மாணவர்கள், கல்வியாளர்கள், கல்வி சான்றோர்கள், பல்கலை வேந்தர்கள், முதல்வர்கள், தனியார் பள்ளி கூட்டமைப்பின் நிர்வாகத்தினர் அனைவரும் ஒன்றுகூடி, பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவிடமும், என்னிடமும் கேட்டனர். இதை முதல்வரிடம் தெரிவித்து, விழா நடத்த அனுமதி பெற்றுள்ளோம். முதல்வருக்கான பாராட்டு விழா, மே, 3ம் தேதி மாலை 4:00 மணிக்கு, சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடக்க உள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.அதேபோல், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் ஏற்பாட்டில், நாளை மாலை 5:00 மணிக்கு, சென்னை கிண்டியில் உள்ள, ஐ.டி.சி., கிராண்ட் சோழா ஹோட்டலில், கவர்னருக்கு எதிரான வழக்கில் ஆஜரான, மூத்த வழக்கறிஞர்கள் முகுல்ரோத்கி, அபிேஷக் சிங்வி, ராகேஷ் திவேதி, வில்சன் ஆகியோருக்கு பாராட்டு விழா நடக்க உள்ளது. இதில் முதல்வர் பங்கேற்க உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை