உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழக பல்கலைகளில் வள்ளலார் பற்றிய ஆராய்ச்சி கட்டுரைகள் மிகவும் குறைவு கவர்னர் ரவி குற்றச்சாட்டு

தமிழக பல்கலைகளில் வள்ளலார் பற்றிய ஆராய்ச்சி கட்டுரைகள் மிகவும் குறைவு கவர்னர் ரவி குற்றச்சாட்டு

சென்னை:“சுதந்திரத்திற்கு பின், வள்ளலாரை நாம் மறந்து விட்டோம். பொதுவெளியில் அவருக்கான அங்கீகாரம் குறைந்து விட்டது. அவரின் சமூக, ஆன்மிக இயக்கம் அரசியலால் கைப்பற்றப்பட்டது,” என, கவர்னர் ரவி குற்றம் சாட்டியுள்ளார். சென்னை, கிண்டி கவர்னர் மாளிகையில், நேற்று நடந்த வள்ளலார் சமரச சுத்த சன்மார்க்க இளைஞர்கள் கருத்தரங்கில் அவர் பேசியதாவது: வள்ளலாரின் போதனைகளை மட்டுமின்றி, அவர் ஏன், எப்போது, எந்த சூழலில் அவதரித்தார் என்பதை, மாணவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். அவற்றை தெரிந்து கொண்டால், எவ்வாறு வாழ வேண்டும் என்பதையும் தெளிவாக புரிந்துகொள்ள முடியும். பாகுபாடு கடந்த 1823ம் ஆண்டில், வள்ளலார் இந்த மண்ணில் தோன்றிய போது இருந்த, அக்கால சூழலைப் படித்து, மாணவர்கள் அறிய வேண்டும். அப்போதே நம் சமூகம் ஆங்கிலேயர்களால் அடிமைப்படுத்தப்பட்டு இருந்தது; பல்வேறு சுரண்டல்கள், அநீதி, பாகுபாடுகள் நிலவின. பின், 1839ல் 70,000 பேர் கையெழுத்திட்டு, அப்போதைய மதராஸ் கவர்னரிடம் மனு அளித்தனர். அது, பள்ளிகளில் சேர்க்கை பெறுவதற்கான மத அடிப்படை நிபந்தனைக்கு எதிரான மனு. அதாவது, அனைத்து பூர்வீக பள்ளிகளையும் மூடி, ஆங்கில பள்ளிகளை நிறுவியதுடன், பள்ளியில் சேர வேண்டுமானால், குழந்தைகள் கிறிஸ்துவத்தை ஏற்க வேண்டும் என்ற நிபந்தனையை ஆங்கிலேயர்கள் விதித்தனர். அதைப் பற்றி, இன்று நாம் மறந்து விட்டோம். ஆனால், அப்போது மக்கள் எவ்வளவு துன்பப்பட்டிருக்க வேண்டும் என்பதற்கு, அந்த 70,000 கையொப்பங்கள் சான்று. இப்படிப்பட்ட சூழலில் தான் வள்ளலார் தோன்றினார். ஆங்கிலே ஆட்சியாளர்களுக்கு வள்ளலாரை பிடிக்கவில்லை. காரணம், அவர் சமூகத்தை ஒன்றிணைத்தார்; பாகுபாடின்றி சகோதரத்துவத்தை போதித்தார். அது, ஆங்கிலேயரின் நலனுக்கு முரணானது. வள்ளலார் தன் பள்ளிகளில், ஜாதி, மத, மொழி பாகுபாடின்றி, அனைவரையும் சேர்த்து கற்றுத் தந்தார். தமிழ், சமஸ்கிருதம் ஆகியவற்றை போதித்து, நம் பாரம்பரிய அறிவை காப்பாற்றினார். சுதந்திரத்திற்குப் பின், நாம் அவரை மறந்து விட்டோம். பொதுவெளியில் அவருக்கான அங்கீகாரம் குறைந்து விட்டது. அவரின் சமூக, ஆன்மிக இயக்கம், அரசியலால் கைப்பற்றப்பட்டது. இங்கே, தெய்வீகத்தை அரசியல் மறுத்ததால், வள்ளலார் பின்னால் தள்ளப்பட்டார். கேரளாவில், நாராயண குரு துவங்கிய சமூக சீர்திருத்த இயக்கம், அரசியலால் கைப்பற்றப்படவில்லை. அதனால், இன்றும் அங்கே பாகுபாடு போன்றவை மிகக்குறைவு; தமிழகத்தில் இன்றும் தொடர்கிறது. இன்று நமக்கு வள்ளலாரின் போதனைகளை பரப்பும் இயக்கம் தேவைப்படுகிறது. அதற்கு ஆராய்ச்சிகள் மற்றும் ஆய்வுகள் தேவை. ஆனால், தமிழகத்தில் உள்ள பல்கலைகளில், ஆயிரக்கணக்கான பிஎச்.டி., ஆய்வுகள், அரசியல் தலைவர்களை பற்றியே உள்ளன. வள்ளலாரை பற்றிய பிஎச்.டி., ஆய்வுகள் ஒன்றிரண்டு இருந்தாலும், அவை வெளிப்படையாக இல்லை. போதனைகளில் பதில் வடமாநிலங்களில், துளசிதாஸ் போன்ற சமூக, ஆன்மிக தலைவர்களைப் பற்றிய ஆயிரக்கணக்கான ஆய்வுகள் உள்ளன. ஆனால், தமிழகத்தில் வள்ளலாரை பற்றிய ஆராய்ச்சிகள் மிகவும் குறைவே. உலகம் இன்று சந்திக்கும் வறுமை, போர், காலநிலை மாற்றம் போன்ற பிரச்னைகளுக்கு, வள்ளலாரின் போதனைகளில் பதில் உள்ளது. இவற்றை நவீன காலத்துக்கேற்ற மொழியில் வடிவமைக்க வேண்டும். அவரின் போதனைகள் சில தொகுப்புகளில் இருந்தாலும், அவை விதைகள் போன்றவை. ஒவ்வொரு விதையும் பெரும் மரமாக வளரக்கூடியது. அதை இன்றைய தலைமுறைக்கு பொருத்தமாக, சமகால பிரச்னைகளுடன் ஒப்பிட்டு விளக்க வேண்டும். இவ்வாறு கவர்னர் ரவி பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ