சென்னை:தமிழக அரசு துறைகளில், வி.ஏ.ஓ., இளநிலை உதவியாளர், டைப்பிஸ்ட் உள்ளிட்ட, 6,244 பதவிகளுக்கு, 'குரூப் - 4' தேர்வை, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி., சார்பில், குரூப் - 4 போட்டி தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஜூன் மாதம் தேர்வு நடக்க உள்ளது.ஆன்லைன் விண்ணப்ப பதிவு நேற்று துவங்கியது. பிப்ரவரி வரை விண்ணப்பிக்கலாம். இரண்டு வகையான வினாத்தாள்கள் வழங்கப்படும்.தமிழ் தகுதித்தாள், 150 மதிப்பெண்களுக்கு, 100 கேள்விகள் இடம் பெறும். பொது பாடங்களில், 75 கேள்விகள் மற்றும் அறிவுத்திறன் சோதனை கேள்விகள், 25 என, 100 கேள்விகளுக்கு, 150 மதிப்பெண் வழங்கப்படும்.மொத்தம், 200 கேள்விகளுக்கு, 300 மதிப்பெண் வழங்கப்படும். குறைந்தபட்சம், 90 மதிப்பெண் பெற்றவர்கள், தேர்ச்சி பட்டியலில் இடம் பெறுவர். கூடுதல் விபரங்களை, டி.என்.பி.எஸ்.சி.,யின் www.tnpsc.gov.in/ என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
எண்ணிக்கை குறைப்புக்கு கண்டனம்
'குரூப் - 4' காலிப் பணியிடங்களின் எண்ணிக்கையை வெகுவாக, தி.மு.க., அரசு குறைத்து உள்ளதற்கு, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.பன்னீர்செல்வம்: இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலான தி.மு.க., ஆட்சியில், அரசு ஊழியர்களின் எண்ணிக்கை, தொடர்ந்து இறங்கு முகமாகவே இருக்கிறது. பெரும்பாலான அரசு அலுவலகங்களில், அரசு ஊழியர்கள் எண்ணிக்கை பாதிக்கும் குறைவாக உள்ளது. சில மாதங்களுக்கு முன், 55,000 காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என, முதல்வர் அறிவித்திருந்தார். ஆனால், 'குரூப் - 4' பணியிடங்களுக்கான அறிவிப்பில், 6,244 இடங்கள் மட்டுமே குறிப்பிடப் பட்டு இருப்பது, இளைஞர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.இந்த அறிவிப்பால், அரசுப் பணிகள் வெகுவாக பாதிப்படைவதோடு, இளைஞர்களின் எதிர்காலமும் பாதிக்கப்படுகிறது. இந்த ஆண்டு குறைந்தபட்சம், ஒரு லட்சம் குரூப் - 4 காலி பணியிடங்களையாவது நிரப்ப வேண்டும்.தினகரன்: கடந்த ஆண்டு நடந்த குரூப் - 4 தேர்வுக்கு, 10,000த்துக்கும் அதிகமான காலிப் பணி இடங்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது வனக்காவலர் பணியிடங்களையும் சேர்த்து, 6,244 பணியிடங்களுக்கு மட்டுமே, அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. இது, தேர்வை எதிர்பார்த்து காத்திருந்த, லட்சக்கணக்கான தமிழக இளைஞர்களை ஏமாற்றமடைய செய்திருக்கிறது.இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.