உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஜி.எஸ்.டி., பதிவு: வணிகர்களுக்கு உதவ மாதம் 4 நாட்கள் அதிகாரிகள் ஆய்வு

ஜி.எஸ்.டி., பதிவு: வணிகர்களுக்கு உதவ மாதம் 4 நாட்கள் அதிகாரிகள் ஆய்வு

சென்னை:ஜி.எஸ்.டி., பதிவு செய்வது தொடர்பாக வணிகர்களுக்கு உதவவும், நேர்மையாக வணிகம் செய்வதை உறுதி செய்யவும், மாதத்தின் இரண்டாவது மற்றும் நான்காவது வாரத்தில் கள ஆய்வு செய்யும்படி, அதிகாரிகளை வணிக வரித்துறை அறிவுறுத்திஉள்ளது. தமிழகத்தில் ஆண்டுக்கு, 20 லட்சம் ரூபாய்க்கு மேல் வணிகம் செய்வோர், ஜி.எஸ்.டி., பதிவு செய்ய வேண்டும். தற்போதைய நிலவரப்படி, 11.50 லட்சம் வணிகர்கள் ஜி.எஸ்.டி., பதிவு செய்துள்ளனர். சிலர் அதிகளவு வியாபாரம் செய்தும், ஜி.எஸ்.டி., பதிவு செய்யாமல் உள்ளனர். எனவே, ஒவ்வொரு அதிகாரியும் தங்களின் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் கள ஆய்வு செய்து, ஜி.எஸ்.டி., பதிவு செய்யாத வணிகர்களை பதிவு செய்ய உதவுமாறு, அதிகாரிகளை வணிக வரித்துறை அறிவுறுத்தியுள்ளது.இதுகுறித்து, வணிக வரித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:சில வணிகர்கள் உண்மையிலேயே, ஜி.எஸ்.டி.,க்கு எப்படி பதிவு செய்ய வேண்டும் என்று தெரியாமல் உள்ளனர். வேறு சிலர் வேண்டுமென்றே பதியாமல் உள்ளனர். சிலர் தொழில் செய்யவில்லை என்று தகவல் தெரிவித்து விட்டு, தொடர்ந்து வணிகம் செய்கின்றனர். எனவே, ஒவ்வொரு பகுதியிலும் கள ஆய்வு செய்து, இதுவரை ஜி.எஸ்.டி., பதிவு செய்யாதவர்களுக்கு உதவும்படி, ஜி.எஸ்.டி., பதிவு செய்த முகவரியில் நிறுவனங்கள் செயல்படுகின்றனவா என்பதை ஆய்வு செய்யுமாறும் அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்த ஆய்வுகளை, வணிகர்களுக்கு இடையூறு ஏற்படுத்தாமல், மாதத்தின் இரண்டாவது மற்றும் நான்காவது வாரங்களில், புதன், வியாழக்கிழமைகளில் மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

'சிரமம் ஏற்படுத்தக்கூடாது'

வணிகர் சங்கங்களின் நிர்வாகிகள் கூறியதாவது:ஒரே இடத்தில் ஒரு வணிகர், ஜி.எஸ்.டி., பதிவு செய்து நேர்மையாகவும், மற்றொருவர் பதிவு செய்யாமலும் வணிகம் செய்கின்றனர். பதிவு செய்யாத நபர், பொருட்களை குறைந்த விலைக்கு விற்று அதிக லாபம் பார்க்கிறார்.இதனால், நேர்மையாக செயல்படும் வணிகர்களின் தொழில் பாதிப்படைகிறது. தவறு செய்யும் வணிகர் மீது புகார் அளித்தால், அவரால் புகார் அளிப்பவருக்கு பாதிப்பு ஏற்படும். அதேசமயம், அதிகாரிகள் கள ஆய்வு செய்து, தவறு செய்பவர் மீது நடவடிக்கை எடுத்தால், யாருக்கும் பாதிப்பு ஏற்படாது. எனவே, 10 ஆண்டுகளுக்குப் பின், வணிக வரித்துறை அதிகாரிகளே தற்போது கள ஆய்வுக்கு வருவது நல்ல முயற்சி.ஆய்வுக்கு வரும் அதிகாரிகள், வணிகர்களுக்கு சிரமம் ஏற்படுத்தாமல் செயல்பட வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை