சென்னை: தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகளில், பயிர்க்கடன் வாங்க செல்லும் விவசாயிகளிடம், ஜாமின்தாரர் உத்தரவாதம் கேட்டு நெருக்கடி தரப்படுவதாக புகார் எழுந்து உள்ளது.தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில், குறுவை பருவ நெல் சாகுபடி துவங்கியுள்ளது. சாகுபடிக்கு தேவையான செலவுகளுக்கு, தேசிய வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகளில், பயிர்க் கடன் பெறும் முயற்சிகளில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். அலைக்கழிப்பு
ஆனால், பல்வேறு ஆவணங்கள், ஜாமின்தாரர் கையெழுத்து கேட்டு, விவசாயிகள் அலைக்கழிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.இதுகுறித்து, தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் கூறியதாவது: கூட்டுறவு வங்கிகளில், பயிர்க்கடன் பெற வேண்டுமானால், ஒரிஜினல் சிட்டா அடங்கல், கணினி சிட்டா, ஆதார் நகல், ரேஷன் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, பான் கார்டு, வங்கி சேமிப்பு புத்தகம் முதல் பக்கம், வங்கி கடன் அட்டை, பாஸ்போர்ட் அளவு போட்டோ போன்றவற்றை, இரண்டு, 'செட்' சமர்ப்பிக்க வேண்டும் என்கின்றனர்.மேலும், ஜாமின்தாரர் புகைப்படம் இணைக்க வேண்டும். தேவைப்படும் போது, அவரை நேரில் அழைத்துச் செல்ல வேண்டும் என்கின்றனர். கொடுமை
இதுகுறித்து கூட்டுறவு வங்கி அதிகாரிகளிடம் கேட்டால், இந்திய ரிசர்வ் வங்கி வழிகாட்டுதல்படி ஆவணங்கள் பெறப்பட்டு, கடன் வழங்குவதாக விளக்கம் தருகின்றனர். இதனால், பலருக்கு வங்கி கடன் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. தி.மு.க., அரசின் விவசாய விரோத கொள்கைகளில், இது மிக கொடுமையானதாக உள்ளது. அ.தி.மு.க., ஆட்சியில், 10 ஆண்டுகளாக எந்த பிரச்னையும் இல்லாமல் பயிர்க்கடன் கிடைத்தது. இவ்வாறு அவர் கூறினார்.