ஜாமின் கிடைத்தும் சிறையில் தவிக்கும் 175 கைதிகள் வழக்கை விசாரிக்கிறது ஐகோர்ட்
சென்னை:ஜாமின் நிபந்தனைகளை பூர்த்தி செய்யாததால், சிறைகளில் உள்ள கைதிகளின் நிலை குறித்து, சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது.வேலுார் சிறையில் உள்ள பெண் கைதிக்கு, நிபந்தனைகளுடன் ஜாமின் வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. ஜாமின் நிபந்தனைகளை பூர்த்தி செய்யாததால், 300 நாட்களாகியும், அவர் சிறையில் இருந்து வெளியே வர முடியவில்லை. இதுகுறித்து, பத்திரிகையில் செய்தி வெளியானது.இதையடுத்து, ஜாமின் கிடைத்தும் சிறையில் இருந்து வெளியே வர முடியாத கைதிகளின் எண்ணிக்கை குறித்த விபரங்களை தாக்கல் செய்யும்படி, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், ஜோதிராமன் அடங்கிய அமர்வு உத்தரவிட்டிருந்தது. உத்தரவாதம் அளிக்க முடியாதது உள்ளிட்ட காரணங்களால், 175 கைதிகள் சிறையில் இருப்பதாக, அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.ஜாமின் கிடைத்தும் சிறையில் இருப்பது துரதிருஷ்டவசமானது என்று கூறிய நீதிபதிகள், இந்த விவகாரம் தொடர்பாக தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுப்பதாகவும், வழக்கில் பதில் அளிக்க ஏதுவாக, தமிழக உள்துறை செயலர், சிறைத்துறை டி.ஜி.பி., மற்றும் மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு உறுப்பினர் செயலரை சேர்த்தும் உத்தரவிட்டனர்.